புத்தர் சிலை விவகாரம்: சிங்கள மாணவர்களின் செயலுக்கு கூட்டமைப்பு கண்டனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கலைக்கழகத்தின் வவுனியா வளாக சிங்கள மாணவர்களின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு நேற்றுமுன்தினம் முற்பட்டனர். நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஊழியர்களைப் பூட்டிவைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பொலிஸாரின் தலையீட்டால் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், வளாகமும் இழுத்து மூடப்பட்டது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்ததாவது:-

“இந்தச் சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விக்கூடங்களிலோ அல்லது பொது இடங்களிலோ மத – இன ரீதியான சிலைகள் வைக்கும்போது அவற்றின் நிர்வாகங்களிடம் முறையான அனுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டும். வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை நிறுவ முயற்சித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இன – மத ரீதியான முரண்பாடுகளையடுத்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவது அனுமதிக்க முடியாதது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. இன – மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும். இது நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

உயர் கல்வி அமைச்சும் பிரதமரும் குறிப்பிட்ட வளாகத்துடன் பேச்சு நடத்த வேண்டும்; சுமுகமான முடிவு எட்டப்பட வேண்டும்.

இதேவேளை, வவுனியா மாவட்ட செயலகத்திலும், புத்தர் சிலை நிறுவ மாவட்ட செயலர் நடவடிக்கை எடுத்திருந்தார். அது அங்கே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். இதன் பின்னர் அந்த நடவடிக்கை
நிறுத்தப்பட்டிருந்தது” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்