மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்காதீர்! இந்துப் பாடசாலைக்குள் ‘அபாயா’வைத் திணிக்காதீர்!!

“மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்க வேண்டாம். ‘அபாயா’ என்ற விடயத்தை இந்து பாடசாலைக்குள் திணிக்கவேண்டாம்.”

– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்தது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“திருகோணமலையிலுள்ள பிரசித்தமான பெண்கள், இந்து கலாசாரத்துடனான மேற்குறிப்பிட்ட பாடசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்தது சம்பந்தமாக ஏற்பட்ட பாடசாலையின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அப்பாடசாலையின் பெற்றோர்கள் அப்பாடசாலைக்கு முன்பாக கண்டனப் பேரணி நடத்தியுள்ளார்கள்.

இக்கல்லூரி இந்து மகளிர் கல்லூரியாக இருக்கின்றபோது பாடசாலையில் கடமையாற்றி வந்த முஸ்லிம் ஆசிரியைகள் இந்துப் பாரம்பரியங்களை மதித்து விசேட சீருடையை அணிந்து வந்தனர். எனினும், அண்மையில் மத்திய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஒருசில முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்துள்ளனர். பாடசாலை அதிபர் அவ்வாறு வருவது சம்பந்தமாக பாடசாலையின் கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளார். இதற்கு நான்கு ஆசிரியைகள் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓர் ஆசிரியை மட்டும் அதற்கு உடன்பட்டிருக்கவில்லை.

தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டு சென்று குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்றும், எமக்கு அதிக உச்சபட்ச அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டிவரும் என்றும் கடுந்தொனியில் கூறி அங்குள்ள அபாயா அணிய மறுத்த ஆசிரியையின் சார்பாக பாடசாலைக்குள் நுழைந்த சில நபர்கள் அங்குள்ள அதிபரையும் பெற்றோரையும் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

திருகோணமலை என்பது இராவணன் வாழ்ந்த சிவபூமி. இங்கு மூவின மக்களும் சமத்துவத்துடனும் சகல விழுமியங்களுடனும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தருணத்தில் இவ்வாறான தேவையற்ற விதத்தில் கல்விச் செயற்பாடுகளில் மத ரீதியான நடவடிக்கைகளையும் அது சம்பந்தமாக அழுத்தங்களையும் திணிக்கக்கூடாது.

இந்த நடவடிக்கை மீனுக்காகக் காத்திருக்கும் கொக்குப்போல பேரினவாதிகளுக்கு நல்லதாக அமைந்துவிடும். நாங்களே சென்று அவர்களின் வாய்க்குள் மீனை எடுத்துக்கொடுப்பதாக அமைந்துவிடக் கூடாது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் நாங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, ஓர் இந்துப் பாடசலையின் கலாசார விழுமியங்களுக்கு மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்க இடமளிக்க முடியாது.

இலங்கையின் குடிமகன் என்ற ரீதியிலும், தலைநகரின் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையிலும், கல்விச் செயற்பாடுகளில் அதிக அக்கறை கொண்டவர் என்ற ரீதியிலும், நாங்களும் தலைநகரில் முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருகின்றோம் என்பதாலும் மதத்தின் பெயரால் கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இது சம்பந்தமாக கிழக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் வித்தியானந்தமூர்த்திக்கும், திருகோணமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கும் தொடர்பை ஏற்படுத்தி நிலைமையை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு நான் கேட்டுள்ளேன்.

இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரும், ஒரு வருடத்திற்கு முன்னரும் இராமகிருஷ்ண கோணேஷ்வரா இந்துக்கல்லூரி, நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம், விபுலானந்தா இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் ‘அபாயா’ அணிவது சம்பந்தமான பிரச்சினைகள் தலைதூக்கியிருந்தன.

எனவே, அபாயா அணிய வேண்டும் என்ற முஸ்லிம்களின் கலாசாரத்தை நான் மதிக்கின்றேன். ஆனால், அதேபோல இந்துக்களின் கலாசாரத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டால் நான் சீறி எழவும் தயங்கமாட்டேன்.
அதையும் தாண்டி கல்விச் செயற்பாடுகளில் ‘அபாயா’ போன்ற விடயங்களை இந்துப் பாடசாலைகளில் புகுத்த முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்