லண்டனில் தூதரகத் திறப்பு விழாவில் பங்கேற்காமைக்கு ட்ரம்ப் விளக்கமளிப்பு

லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய தூதரகம் அமைந்துள்ள இடம் மிக ஆபத்து மிக்கதென்பதுடன், மோசமானதெனவும் கூறியுள்ளார்.

வொஷிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்கத் தூதரகத்தை இடமாற்றுவதற்கான தீர்மானத்தை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் அரசாங்கம் கடந்த 2008ஆம் ஆண்டு எடுத்தது. ஆனால், பழைய தூதரகத்தை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விற்பனைக்கு செய்தமைக்கு அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்தத் தூதரக விற்பனைக்கு உடன்படாத தான், தூதரகத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள விரும்பவில்லையெனவும், கூறியுள்ளார்.

லண்டன் நகரிலிருந்த அமெரிக்கத் தூதரகம், தென்மேற்கு லண்டனின் நைம் எல்ம்ஸ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. 730 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் 800 பணியாளர்கள் பணியாற்றும் வகையில், இந்தத் தூதரகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதி பிரித்தானியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விஜயம் செய்யவுள்ளதுடன், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே மற்றும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியையும் ட்ரம்ப் சந்திக்கவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்