வெளிக்கள அரங்கில் மகிடிக்கூத்து

மட்டக்களப்பு மகிடிக்கூத்து வகைகளில் வந்தாறுமூலை பலாச்சோலைப் பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படும் இம் மகிடிக்கூத்து உடையார், விதானையார், பொலிஸார், வோசடாமுனி, சீட முனி, வேறு இரண்டு முனிவர்கள், காமாட்சி, மீனாட்சி, கம்பகாமாட்சி, மதுரை மீனாட்சி, குறவர் குறத்தி போன்ற பாத்திரங்களைக் கொண்டதாகும். இப்பாத்திரங்கள் அளிக்கை செய்யப்படும் இடத்தின் அருகாமையிலுள்ள வீட்டில் அவர்களுக்குரிய ஒப்பனை செய்யப்பட்டு அண்ணாவியாரால் அவர்களுக்கேற்ற வரவுத் தாளங்களைப் பாடி மத்தள அடியுடன் அழைத்து வரப்படும்.

இதன் அரங்கமைப்பானது நீள்சதுர அமைப்பில் சுற்றிவர கயிறு கட்டப்பட்டு ஒரு நுழைவாயில் கொண்டதாக காணப்படும். இங்கு நடுவில் கொடிமரம் நாட்டப்பட்டு காளிக்கு மடையும் வைக்கப்பட்டிருக்கும். இதனைச் சுற்றி நான்கு திசையிலும் நான்கு கும்பங்கள் வைக்கப்பட்டு இதற்கு பாதுகாப்பிற்காக நான்கு சீடப்பிள்ளைகளும் அமர்ந்திருப்பர். மேலும் அரங்கின் உட்பகுதியில் ஜந்து பந்தல்கள் கட்டப்பட்டிருக்கும். இதில் குறவர்களுக்கு மட்டும் ஓலைகளாலும் இலை குழைகளாலும் பந்தல் அமைக்கப்பட்டும் மற்றைய பந்தல்கள் சேலைகளாலும் அலங்கரிக்கப்படும்.

அரங்கில் முதலாவதாக உடையார், விதானியார், பொலிஸார் ஆகிய மூவரும் “ தந்த தகிர்த தகிர்த தாம் திந்த திகிர்த திகிர்த தெய்யா” என்ற தாளக்கட்டோடு அரங்கில் மகிடி பார்ப்பதற்காக வருவார்கள். இவர்களில் உடையாரே அதிகாரம் உடையவராக காணப்படுவார். இவர் வியப்புடனும், பயத்துடனும், தனது அதிகாரப்பார்வையுடனும் கேள்விகள் கேட்க, விதானியார், பொலிஸ்காரன் பதில் சொல்லும் முறை விகடத் தன்மை வாய்ந்ததாகக் காணப்படும். இது தொடர்ச்சியாக மகிடி ஆற்றுகை முடியும் வரை நடைபெறும்.

அடுத்து வோசடாமுனியும் அவனது சீடனும் தொடர்ச்சியான மந்திர உட்சாடனங்களுடனும் “தில்லை மண்டுள் நாடியே வா சுவாமி – சிதம்பர தேவா திருவடி பணிந்தோம்” என்ற தாளக்கட்டோடு மகிடி நடைபெறும் அரங்கு பூராகவும் காவல் செய்துவரும் இக்காட்சி பிராமண சமூதாயத்தின் அதிகாரத் தன்மையினை கேளிக்கை செய்வதாக காட்டப்படும். தொடர்ந்து இரு முனிகளும் “தாக தாக தாக தாகத்தோம் தெய்ய – தாக தத்துமி தெய்ய தெய்யத்தாம்” என்ற தாளக்கட்டோடு ஆடிக் கொண்டு அவர் அவரது பந்தலுக்குள் அமர்வார்கள்.

அடுத்ததாக தமிழர்களின் கிராமியத் தெய்வங்களான காமாட்சி, மீனாட்சி அவர்களது வரவு “அம்பாள் மதுரை மீனாட்சி வரம் தருவதே காட்சி காமாட்சி” என்ற தாளக்கட்டுடன் தீர்த்த நீர் தெளித்து காவல் பண்ணி அவர்களுக்கான பந்தலுக்குள் அமர்வார்கள். இவi;களைத் தொடர்ந்து கம்பகாமாட்சி, மதுரை மீனாட்சி ஆகிய இருவரும் “நாகரெட்சம் பூதவாணி உன்னை நாடி வந்தேன் கலைவாணி” என்ற தாளக் கட்டோடு ஆடிவந்து அவர்களது பந்தலுக்குள் அமர்வார்கள்.

தொடர்ந்து வந்தேறு குடிகளான குறவர்கள் “சலி சாலி சவுக்கே சாலிமான் சவுக்கே” என்ற தாளக்கட்டோடு ஆடிக்கொண்டு அவர்களது பந்தலுக்குள் அமர்வார்கள்.

பின்னர் மகிடியின் கதையோட்டம் குறவர்கள் கும்பத்தினை எடுப்பதுடன் ஆரம்பிக்கப்படுகின்றது. மேலும் குறவர்கள் கும்பத்தினை எடுக்க முயல்வதும் சீடப் பிள்ளைகள் மந்திர நீர் தெளிப்பதும், குறவர்கள் மயங்கி விழுவதும், உடையாரின் அதிகாரத்தின் மூலமாக காமாட்சி, மீனாட்சியை வரவழைத்து மந்திர நீர் தெளித்து மீண்டும் குறவர்கள் உயிர்த்தெழுவதும் மேலும் குரும்பை வெட்டுதலும், வெற்றிலை ஏறிவதும், காளியம்மன் துணைகொண்டு அனைத்துக் கும்பங்களையும் குறவர்கள் எடுப்பதாக மந்திர தந்திர விளையாட்டுக்கள் நடைபெற்று வந்தேறு குடிகள் வென்றதாக இக்கதை காணப்படும். இக்கதை இன்றும் பலாச்சோலை கிராமத்தில் பயில்நிலையில் காணப்பட்டுள்ள போதும் இன்றும் எந்த ஏடுகளிலும் பதியப்படாதமை குறிப்பிடத்தக்கது.

இவ் மகிடிக்கூத்தினை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் கற்றல் செயற்பாட்டிற்காக ஆற்றுகை செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்பொழுது மக்களை பைத்தியக்காரர்களாகவும் தற்கொலை செய்துகொள்கின்றவர்களாகவும் மாற்றிக்கொள்ளும் நுண்கடன் வழங்கும் பாத்திரம் ஒன்றினை மகிடிக்கூத்தினுள் சேர்த்திருப்பது மிகச் சிறந்ததாகும். கலைகள் மனிதனுடைய தேவைகளைப் பொறுத்து உருவாக்கப்பட வேண்டும் என்பதனை சிறப்பாகக் காட்டுகின்றது. மகிடிக்கூத்து ஆற்றுகை வெளியானது ஒரு தனித்துவத்திற்குரிய வெளியாகும். மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை அவர்களுக்கு ஏற்ற விதத்தில் அமைக்கும்போதுதான் அது அவர்களுக்கு விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஒவ்வொரு ஆற்றுகைகளையும் அதற்குரிய தளத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில் மகிடிக்கூத்து அதற்குரிய ஆற்றுகைத் தளத்தில்தான் கற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் மகிடிக்கூத்தினைப் பார்க்கும்போது அதனுடைய வடிவம் விளங்கினாலும் அதனை கற்றல் செயற்பாட்டின் மூலம் முன்னெடுத்துச்செல்கின்ற போது அதனுடைய தாற்பெரியமானது விளங்கக்கூடியதாக அமைந்தது. இவ்வரங்க வெளியானது பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்கும் சுதந்திரத்தை ஏற்படுத்தியதாகவே அமைந்திருந்தது. பார்வையாளர்கள் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக இருந்து பார்த்தனர். நடிகர்கள் பார்வையாளர்களுடன் உரையாடக்கூடியதாக அமைந்திருந்தது.

மகிடிக்கூத்தானது அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்விகேட்கும் விதத்தில் அமைந்திருந்தது. எடுத்துக்காட்டாக உடையார், விதானையார் செய்யும் வேலைகளைப்பார்த்து கேள்வி கேட்பது. யார் உனக்கு வேலை தந்நது? உன்ட பெயரென்ன? போன்றவற்றைக் கேட்டல். மகிடிக்கூத்து நகைச்சுவை பொதிந்தது உடையார்,விதானையார்,பொலிஸார் போன்றோருடைய நகைச்சுவை, குறவர்களினுடைய செயற்பாடுகள் அவர்கள் கூடிக் கதைத்தல,; இவர்கள் உரையாடும் மொழிநடையானது பார்வையாளர்களுக்கு விளங்காதவையாகவே இருக்கும் இதுவும் நகைச்சுவையாக இருக்கும்.

குறவர்கள் குடும்பம் எடுத்தல் நிகழ்வானது மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. குறவர்கள் கும்பங்களைக் கண்டு பயந்து போதல், கும்பங்களை பாதுகாக்கும் பிராமணச் சீடர்கள் நீர் தெளிப்பதனால் மயங்கி விழுதல், மீண்டும் குறவர்கள் கும்பங்களை எடுத்தல், மந்திர தந்திரங்களுடன் விளையாடுதல் போன்றவை புதிதளித்தல் முறையில் இடம்பெறுவதனைக் காணலாம்.

இக்கூத்திலே மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய பாத்திரங்களை தாங்களே தெரிவு செய்து எடுத்து ஆற்றுகை செய்தமையினால் இக்கூத்தானது வரவேற்பைப் பெற்றது. இவ்வரங்கு தங்களுடைய வினாக்களை பார்வையாளர்களுக்கு விட்டுச்செல்லக் கூடியதாகவும் அத்துடன் பார்வையாளர் பிரச்சினைகளை இதில் வரும் உடையார்,பொலிஸ்,விதானையார் போன்றோர் அதனைத் தீர்த்து வைப்பதாகவும் அமைகின்றது. இறுக்கமான மனநிலையில் இருப்பவர்களை ஓர் தளர்வான நிலைக்கு கொண்டு வருவதற்கு இது உதவுகின்றது. இதில் வருகின்ற ஒப்பனைகள் மிகவும் சிறப்பானதாகும்.

விதானையார், உடையார், பொலிஸார் போன்றோர் ஒவ்வொருவரும் செய்து கொள்ளும் செயற்பாடுகளையும் மக்கள் தங்கள் உரிமைகளிலும் கடமைகளிலும் எவ்வாறானவர்களாக இருக்கவேண்டும் என்பதனையும் காட்டுகின்றது. இதில் கடன் வழங்க வரும் நபரை விதானையார், உடையார், பொலிஸார், குறவர்கள் போன்றோர் அப்பிரதேசத்தினை விட்டு விரட்டியடிக்கப்படுகின்ற தன்மையினைக் காணலாம். இது பார்வையாளர்களுக்கு சிறந்த முறையில் சென்றடைகின்றது. மகிடிக்கூத்து வெறுமனே கேளிக்கையும் நகச்சுவையும் பொதிந்தது மட்டுமல்ல மக்களை சிந்திக்கவைத்து கடன் வழங்குபவர்களை குறவர்கள் துரத்திவிடுகின்றார்கள் என்றால் ஏன் எம்மால் முடியாது என மற்றவர்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றார்கள்.

மகிடிக்கூத்து ஆற்றுகையானது வெளிக்கள அரங்கில் ஆற்றுகை செய்யப்படுகின்ற போதுதான் அதற்குரிய தனித்துவத்தினை பெறுகின்றது. இன்று பல்கலைக்கழக மட்டத்தில் இது ஆற்றுகை செய்யப்படுகின்றது.

மகிழையாள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்