கடனை வசூலிக்க பாலியல் லஞ்சமா?? நிறுவனங்களிற்கே தெரியாமல் ஊழியர்களின் வெறிச்செயல்

நாளுக்கு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன்கள் பலரின் உயிரை காவுகொள்ளச் செய்கின்றன.

அதிக வட்டிக்கு நுண் கடன் எடுத்து அதனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.
கடந்த வருடங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த 2018 ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் கடந்த நான்கு மாதங்களில் 52 தற்கொலை மரணச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன் 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த இரண்;டு வருடங்களையும் விட இந்த ஆண்டு நான்கு மாதத்திலேயே 52 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விடவும் அதிகமானதாக உள்ளது.
இந்த தற்கொலை மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூளை, களுவன்கேணி, சித்தாண்டி ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறான தற்கொலை மரணங்கள் அதிகம் இடம் பெறுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் தெரிவிக்கின்றார்.

நுண்கடன், வறுமை, போதைப் பொருள் ஆகிய காரணங்களாலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர்

நுண் கடனைப் பெறுபவர்கள் இறுதியில் அதனை மீள செலுத்த முடியாததால் தற்கொலைக்கு செல்கின்றனர்.

சில நுண் கடன் நிறுவனங்கள் பல் வேறுபட்ட பெயரில் இந்த நுண்கடன்களை வழங்கி வருகின்றனர்.
நுண்நிதி நிறுவனங்களில் காணப்படும் ஒழுங்கற்ற நிதியியல் நடைமுறைகள் காரணமாக இன்று நுண்நிதியியல் நிறுவனங்களும் நுண்கடன்களைப் பெற்றுக்கொள்ளும் மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சிறுகடன்கள் சமூகக் கட்டமைப்பில் மிகப் பாதகமானத் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

நுண்கடன் திட்டங்களானது சமூக, பொருளாதார, உளவியல் ரீதியாக பல தாக்கங்களினை ஏற்படுத்தி விடுகின்றது.

ஏதோ ஒரு தேவை கருதி நுண்கடன்களினைப் பெற்றுக்கொள்ளும்போது கடனாளி தாம் பெற்றுக்கொள்ளும் கடனைச் சரியான விதத்தில் கட்டி முடிக்க முடியாத நிலையில் சிக்கலான சூழ்நிலை உருவாக ஆரம்பிக்கின்றது.

சமூகப் பிரச்சினைகள் என்னும்போது நுண்கடன் நிறுவனங்களுக்குக் கடனாளிகளான குடும்பங்களில் காணப்படும் பிள்ளைகளின் கல்வி நிலையானது பாதிக்கப்படுகின்றது.

பெண்கள் ஆண்களுக்குக் கீழேதான் வேலை செய்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் குடும்பப் பொறுப்பு முழுவதுமாக இவர்களின் மீதே சுமத்தப்படுகின்றது.

02இவர்களும் சிறுகடன் திட்டங்களுக்கு வெளியேயான வேலைகளைச் செய்யும்போது வீட்டு வேலைகளைக் குடும்பத்தில் பெண் பிள்ளைகளின் மீது சுமத்துகிறார்கள்.

இதனால் பெண் பிள்ளைகளினுடைய கல்வி நிலையானது பாதிக்கப்படுகின்றது.
இதனைவிடவும் கடன்களினை உரிய திகதியில் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் மாற்று வழிமுறையாகவும் ஆண் பிள்ளைகளின் மீது வருமானம் பெறும் சுமையானது சுமத்தப்படுகின்றது. இதனால் ஆண் பிள்ளைகளினது கல்வி நடவடிக்கையானது பாதிக்கப்படுகின்றது.

இன்று சிறுகடன்கள் மூலம் துஷ்பிரயோக செயல்கள் தூண்டப்படுவதனைக் காணலாம்.

சிறுகடன் திட்டங்களைச் செயற்படுத்தும் முகவர்கள் மூலமாகப் பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

இன்று வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கடன்தொகையை அறவிடும் இம் முகவர்கள் கடனாளி கடனை மீள்செலுத்த முடியாத நிலையில் பாலியல் ரீதியாக லஞ்சம் கோரும் விடயங்களில் ஈடுபடுகின்றனர்.
தற்போது அதிகமான வங்கிகள் கடனாளி கடனுக்கு விண்ணப்பித்த சிறிது காலத்திற்குள்ளேயே உடனடியாக கடனைக் கொடுத்த விடுகின்றனர். நிறுவன உத்தியோகத்தருக்கும் எவ்வளவு கடன்களைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கடன்களைக் கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.

கடன்களினை வழங்கும் நிறுவனங்களுக்கு மக்கள்மீது கவலை இல்லை. இலாபத்தில் மாத்திரமே கவனமுண்டு. பலர் வட்டி மற்றும் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போகும் போது தங்கள் கடமையினைத் தவறிவிட்ட உணர்விலும் நெருக்குதல்கள் ஏற்படும்போது அதற்கு முகங்கொடுக்க முடியாமலும் குழம்பிப்போய் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இதனால் இறந்தவரின் குடும்பம் கவலையுறும். பிள்ளைகளும் பெற்றோர்களினது இச்செயலினால் மிகவும் பாதிக்கப்பட்டு ஆதரவு அற்றவர்களாகச் சமூகத்தில் தூக்கி வீசப்படும் நிலை உருவாகும்.
நுண்கடன்கள் மன அழுத்தத்திற்கும் காரணமாக அமைகின்றன. இன்றைய அவசர உலகில் எந்த ஒரு தனிமனிதனும் தன்னை மன அழுத்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். தாம் ஒரு கடனாளி என்ற உணர்வு தினம் தினம் கடனாளியை வாட்டி எடுக்கின்றது. கடன் தொகையையைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் கடனாளிக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் போது நாளடைவில் கடனாளியின் உடல்நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு நுண்கடன்களானது தள்ளி விடுகின்றது.

முரண்பாட்டு நிலையினை தோற்றுவிப்பதாகவும் இவ் நுண்கடன்கள் காணப்படுவதனைக் காணலாம். அந்த வகையில் கடன் வழங்குகின்றவர் மற்றும் கடனினைப் பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலையினைத் தோற்றுவிக்கின்றது. சிறுகடனை வழங்கும்
நிதி நிறுவன முகவர்கள் கடன் தொகையை மீள் பெற்றுக்கொள்ளுதல் என்னும் விடயத்தில் கவனம் செலுத்தவதனையும் கடனாளியின் குடும்பத்தின் நிலைமையினையோ அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலையினையோ கருத்திற்கொள்ள தவறுகின்ற நிலையில் கடன் தொகையினைக் கட்ட முகவர்கள் இறுக்கமான முறையில் செயற்படுவதானாலும் கடனாளி கடனைக் கட்ட முடியாத நிலையிலும் இருவருக்கிடையிலும் முரண்பாடானது ஏற்படுகின்றது.

மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலும் முரண்பாடு தோன்றுகின்றது. குறிப்பாகக் கணவன் மனைவிக்கு இடையிலே முரண்பாடு உருவாகின்றது. அதாவது நுண்கடன் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடனாளிகளாக மாறுகின்றவர்கள் ஒப்பீட்டளவில் பெண்களாகத்தான் காணப்படுகின்றார்கள். எனவே பெண்கள் கடனைப்பெற்று ஏதோ ஒரு தேவைக்காக அதனைப் பயன்படுத்தியிருப்பர். கடன்தொகை கட்ட ஆரம்பித்த பின்னர் அந்த கடன் தொகைக்கான பணத்தினைச் செலுத்துவதற்கு மனைவி கணவனிடம் பணம் கேட்கும்போது கணவனிடம் பணம் இல்லாத நிலையில் இருவருக்கிடையிலும் முறிவு ஏற்படத் தொடங்குகின்றது. சில வேளைகளில் கணவனுக்குத் தெரியாமல் மனைவி கடன்பெறல் அல்லது மனைவி வேறு ஒரு நபருக்குக் கடன் தொகையினைப் பெற்றுக் கொடுத்தல் என பல காரணங்களினால் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படுகின்றன.

கடனாளிக்கும் மற்றும் கடனாளிக்குப் பிணையாக இருந்தவருக்குமிடையே பிணக்குத் தோன்றுகின்றது.

கடனாளியினால் கடன் தொகையினைக் கட்ட இயலாத நிலையில் அவர் கடன் பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் மோசமான செயற்பாடுகளுக்கு உட்பட வேண்டிய நிலை உருவாகின்றது. இதனால் கடனாளி, ஏமாத்துக்காரர் என்கின்ற பட்டம் சூட்டப்பட்ட நிலையில்தான் வாழும் நிலை உருவாகின்றது. இதனைவிடவும் மதுபாவனையின் பாதிப்பும் சமூகத்தினைப் பாதிக்கின்றது. மனைவி கடனினைப் பெறும்போது கணவன் அதனைத் தவறான முறையில் மதுபாவனையில் மூழ்கிக் கரைத்துவிடுகின்றான். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் இதனால் பாதிக்கப்படுகின்றது.


அறியாமையினால் தமது வருமானத்தை மீறிக் கடனைப் பெற்றுக் கொள்வதனால் கடனில் இருந்து இருந்து மீள முடியாத நிலை உருவாகிறது. அதாவது நுண்கடன் நிறுவனங்களினது விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் என்பன ஆங்கில மொழியிலே காணப்படுவதனால் நுண்கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற மக்கள் குறித்த நிறுவனத்தின் கடன்தொகை தொடர்பான பூரணமான விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையானது காணப்படுகின்றது. எனவே எல்லோரும் கடன் எடுக்கின்றார்கள் நாமும் கடனைப் பெறலாம் என்ற ஆசை தூண்டப்பட்ட நிலையில் கடனுக்குள் போய் சிக்கிக் கொள்கின்றனர். கடன் தொகையினைக் கட்ட ஆரம்பிக்கின்ற போதுதான் உண்மையான நிலையினைக் கண்டு கொள்கின்றனர்.

தம்முடைய வழமையான வருமானத்தினைக் கொண்டு கடன் தொகையினைக் கட்டவும் முடியாமல், கடன் தொகையில் இருந்து மீளவும் முடியாமல், குடும்பத்தினைக் கொண்டு சரிவர நடத்தவும் முடியாமல் அல்லல்படுகின்றனர். கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற கடனாளிகளின் குடும்பத்தினுடைய எதிர்கால பணத்துடன் தொடர்புடைய நல்ல திட்டங்களானது பாதிக்கப்படும். கடன்களில் சிக்கித் தவிப்பதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குக் கூட போசாக்கான உணவினைக் கொடுக்க முடியாத நிலையில் காணப்படுவர். இவ்வாறு பல்வேறுபட்ட பாதகமான தாக்க விளைவுகளினை நுண்கடன்கள் ஏற்படுத்துகின்றது.

கிராமத்திலுள்ள வறிய மக்களை தேடிச் செல்லும் சில நுண்கடன் வழங்கும் நிறுவன அதிகாரிகள் இலகுவாக கடன்களை வழங்குகின்றனர்.

01அவர்களிடத்தில் கடனுக்கான வட்டி வீதம் எப்படி அதை செலுத்துவது என்பன போன்ற தகவல்களை வழங்காமல் சில பொய்களை கூறி கடனை வழங்கி விடுகின்றனர்.

வறுமையில் காணப்படும் இந்த மக்கள் கடனைப் பெற்று விட்டு அதனை வட்டியுடன் சேர்த்து மீள செலுத்துவதற்கு மிகவும் கஸ்டப்படுகின்றனர். இந்தக் கடன்களுக்கான வட்டியென்பது மிகவும் கொடூரமானது. அதிக வட்டிக்கே கடன்களை வழங்குகின்றனர்.

கடனை வழங்கி விட்டு அதனைப் பெறுவதற்காக வாராந்தம் அவர்களின் வீடு தேடிச் செல்லும் அதிகாரிகள் பயணாளி கடனை செலுத்த குறித்த வாரம் தவறினால் அதற்கு இந்த அதிகாரிகள் தேவையற்ற விதத்தில் கதைப்பதும் அவர்களின் உள்ளங்களை காயப்படுத்தும் வகையில் கதைப்பதாகவும் சில பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நுண்கடன் நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனைப் பெற்று அதனை திருப்ப செலுத்த கஸ்டப்படும் பெண்களுடன் தேவையற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கடனை திருப்ப செலுத்த முடியாதவர்கள் தற்கொலைக்கே செல்கின்றனர்.

சமூகத்தை அழிக்கும் செயலாக மாறியுள்ள இந்த நுண் கடன் திட்டமானது பலரின் குடும்பங்களை சீரழித்துள்ளது.

இந்த நுண் கடன் திட்டத்தினால் சில குடும்பங்களில் தாய் தந்தையரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மனைவியை இழந்து கனவன், கனவனை இழந்து தவிக்கும் மனைவி இவ்வாறு பல குடும்பங்களின் நிலைமைகளை காணமுடிகின்றது.

தனது மரணவிசாரனை அனுபவத்தில் மிகக் கூடுதலான தற்கொலைகள் நுன்கடன் திட்டத்தினாலும், போதைப்பொருள் பாவனையினாலுமே நடைபெற்றிருப்பதை அவதானிக்க முடிவதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் குறிப்பிடுகின்றார்.

அத்தோடு குடும்ப பிணக்குகள், .இளம்வயது திருமணங்கள், பாலியல் தொல்லைகள் போன்றவற்றினாலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

கடன் பெற்று வெளிநாட்டுக்கு தொழிலுக்காக அனுப்பிய கனவன் இரண்டு மாதங்களினால் கனவன் ஊர் வந்து விட்டார் கடனை அடைக்க முடியாததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட மிகப்பரிதாபரகமான சம்பவம் கடந்த வாரம் மட்டக்களப்பு வந்தாறுமூளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இரண்டு முறை கட்ட பெற்ற இந்த மனைவி மூன்றாவது முறையும் கடனைப் பெற்று கனவனை வெளி நாடு அனுப்பியுள்ளார். கனவனுக்கு அங்கு தொழில் கஸ்டம் என்பதால் அவர் ஊர் வந்து விட்டார் கடன் வழங்கிய நிறுவன அதிகாரி அடிக்கடி வீட்டுக்கு வந்து கடனை கட்டுங்கள் என கஸ்டப்படுத்த மனைவி தனது உயிரை மாய்த்து கொண்டார்.
காளிகோவில் வீதி ஏறாவூர் 4ல் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தை இவர் ஒரு மேசன் கூலித்ததொழிலாளி தனது பிள்ளைகளை கல்வி கற்க வைப்பதற்கு அதே போன்று அன்றாட தேவைகளுக்காக தான் உழைத்து வரும் பணம் போதாது என்பதற்காக பல் வழிகளிலும் கடன் பட்டு பிள்ளைகளை பராமரித்து வந்த போது கடன் தொல்லை அதிகரிக்க உள நோய்க்கு ஆளாகினார்.

மனோ நிலை பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு தொழில் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து குடும்ப நிலையை கருத்திற் கொண்டு இவரது மனைவி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கூலி வேலைக்கு சேர்ந்தார்.

மனோ நிலை பாதிக்கப்பட்டிருந்த கனவன் ஒரு நாள் இங்கு தனது படுக்க அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

மட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் கடற்றொழில் செய்து வந்தவர் இவர் ஒரு பிள்ளைக்கு தந்தை தான் பட்ட பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

மாவடிவேம்பு பிரதேசத்தில் ஒரு குடும்பம் வீட்டை திருத்துவதற்கு தனியார் வங்கியொன்றில் கடன் பெற்றதால் அதை செலுத்துவதற்கு வசதியில்லாத நிலையில் கனவன் மனைவிக்கிடையே பிரச்சினை அதிகரித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு பல சம்பவங்களை அடிக்கிச் செல்ல முடியும் என திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்த தற்கொலை மரணங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமய, சமூக தலைமைகள், அரசியல் தலைமைகள் முன்வந்து இம் மக்களுக்கு வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நுன்கடன் திட்டத்திலிருந்து இம் மக்களை பாதுகாத்து தற்கொலை முயற்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்