என்னை சுட்டு விட்ட பயணிகளைச் சுடுங்கள் என்று சொன்ன சிங்கள சகோதரரை நினைவு கூர்ந்தார் சிவாஜி

பேருந்தில் பயணித்த தமிழ்ப் பயணிகளை இறக்கி இராணுவம் சுட முயற்சி செய்த போது குறித்த தன்னை சுட்டு விட்டு மக்களை சுடுங்கள் என்றார் பேருந்தின் சாரதியான வில்லியம் என்ற சிங்கள சகோதரர் என்பதை நினைவு கூர்ந்தார் வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட, பேருந்து சாரதியான வில்லியம் மற்றும் 67 பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மன்னாரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரச படைகளினாலும் துணை நடவடிக்கைகளினாலும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழின படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளை மே 12ஆம் திகதி ஆரம்பித்து மே 18 ஆம் திகதி வரை தமிழின படுகொலை நினைவு வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

1985 ஆம் ஆண்டு உயிலங்குளத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளை இறக்கி இராணுவம் சுட முயற்சி செய்தபோது குறித்த பேருந்தின் சாரதியான வில்லியம் என்ற சிங்கள சகோதரர் தன்னை சுட்டு விட்டு மக்களை சுடுங்கள் என்றார்.

இந்த நிலையில் இலங்கை இராணுவம் அவரை சுட்டு படுகொலை செய்து விட்டு ஏனைய 67 பயணிகளையும் சுட்டு படுகொலை செய்தனர். அந்த இடத்திலே குறித்த நினைவு அஞ்சலியை தற்போது நடத்துகின்றோம்.

எனவே இந்த படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என்றும் இவர்களது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். சர்வதேசத்தினூடாக நீதியை பெற்றுக்கொள்ள தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்