2018 ஆண்டு அறிக்கை வரும் போது சிறிலங்கா ஊழல் தரவரிசையில் இன்னும் பல படிகள் முன்னேறும்!

நக்கீரன்

இலங்கை, இலஞ்சம் ஊழலுக்குப் பெயர் போன நாடு என்பது உலகறிந்த உண்மை. உலகில் கையூட்டு, ஊழல் நிறைந்த நாடுகளை வெளிப்படைக்கான பன்னாட்டு அமைப்பு (Transparency International) ஆண்டு தோறும் பட்டியலிட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய ஊழல் மலிவுச் சுட்டெண் (Corruption Perceptions Index) மற்றும் பெறுபேறுப் புள்ளிகளை வழங்கிவருகிறது. இது ஜெர்மன் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் இலாப நோக்கற்ற தன்னார்வுத் தொண்டு நிறுவனமாகும்.

ஒரு நாட்டில் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுமானால் அந்த நாட்டின் அடித்தட்டு மக்களே மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். அதே சமயம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியும் ஊழல், மோசடிகள் கடுமையாகப் பாதிக்கப் படும் என்பது கண்கூடு. வெளிப்படைக்கான பன்னாட்டு அமைப்பின் இந்த ஆண்டு (2017) ஊழல் சுட்டிப் பட்டியலில் 180 நாடுகளில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்த தன்னார்வ அமைப்பின் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கைக்கு நூற்றுக்கு 37 (37/100 ) புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அண்டை நாடான இந்தியாவுக்கு நூற்றுக்கு 38 (38/100 ) புள்ளிகள் கிடைத்துள்ளன. தர வரிசையில் 81 ஆவது இடத்தை (81/180) ப் பிடித்துள்ளது.

பொதுத்துறையில் எவ்வாறெல்லாம் ஊழல்கள் இடம்பெறுகின்றன என்பதை அடிப்படையாக வைத்து உலக நாடுகளை இந்தத் தன்னார்வுத் தொண்டு நிறுவனம் பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலில் ஒரு நாடு O புள்ளிகள் பெற்றிருந்தால் அந்த நாடு அதிகளவு ஊழல் நிறைந்த நாடு என்று பொருள் கொள்ளப்படும். அதேசமயம் ஒரு நாடு 100 புள்ளிகள் பெற்றிருந்தால் ஊழலற்ற நாடெனப் பொருள் கொள்ளப்படும்.

இந்த ஆண்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட 180 நாடுகளில் எந்தவொரு நாடுமே முழுமையாக ஊழலற்ற நாடென்ற தகைமையைப் பெற்றிருக்கவில்லை. ஏசியா பசிபிக் பிராந்தியத்தில் நியூசீலந்து நாடு நூற்றுக்கு 89 புள்ளிகளைப் (89/100) பெற்று தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் 84/100 புள்ளிகள் பெற்றுள்ளது. தரவரிசையில் 6/180 இடத்தைப் பிடித்துள்ளது. இதே சமயம் கம்போடியா, வட கொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சராசரி 40/100 புள்ளிகளே கிடைத்துள்ளன. இந்தோனிசியாவும் ஊழலுக்கு எதிரான போரில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 32/100 இருந்து 37/100 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலைதீவு மிகவும் மோசமான ஊழல் நாடுகள் ஆகும். இந்த நாடுகள் ஊழலில் அதிக புள்ளிகளைப் பெறுகின்றன. ஊடக சுதந்திரமும் குறைவாகக் காணப்படுகிறது. ஊடகவியலாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த நாடுகளில் 16 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists (CPJ) தெரிவித்துள்ளது.

தாழ்ந்த மட்டத்திலுள்ள நாடுகள் வரிசையில் சோமாலியா தொடர்ந்து இடம்பிடித்து வருக்கின்றது. ஊழல் மலிந்த நாடுகளில் அரசாங்கம் வினைத்திறனுடன் செயற்படுவதில்லை. உணவு உட்பட சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு குறுக்கு வழி முறைகளை மக்கள் நாட வேண்டியிருக்கிறத. உயிர் வாழ்வதற்காக முறைகேடான நடவடிக்கைகளில் மக்கள் தள்ளப்படுவதும் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்திருப்பதும் பாரதூரமான ஊழல் குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

அதேசமயம் நாட்டின் வளங்களும் செல்வமும் சொற்ப தொகையினரான உயர் குழுமத்தின் கைகளிலே இருப்பது ஊழலுக்குக் வழிவகுத்திருப்பதாக வெளிப்படைக்கான பன்னாட்டு அமைப்புச் சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக சட்டத்தை நடைமுறைப் படுத்துபவர்கள் மற்றும் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே ஊழலில் ஈடுபடுகிறார்கள்.அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல், சட்டம், ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தல் முதல் கொண்டு சகல மட்டத்திலும் ஊழல் இடம்பெறுகின்றன.

அண்மையில் (மே 03, 2018) சனாதிபதி செயலக அலுவலகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியான எல்.எச்.கே. மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் பி. திசநாயக்க இருவரும் கொழும்பு ஐந்து நட்சத்திர கலதாரி ஹோட்டல் வாகனத் தரிப்பு நிலையத்தில் இந்திய தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூபா 20 மில்லியனை (ரூபா2 கோடி) இலஞ்சப் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலை காணியை கொள்வனவு செய்த இந்திய தொழிலதிபர், தொழிற்சாலைக்குச் சொந்தமான இயந்திரங்களையும் கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முயன்ற போது, இந்த இரு அதிகாரிகளும் அதற்காக இலஞ்சம் கோரியுள்ளனர். இயந்திரங்கள் மற்றும் கட்டடங்களின் பெறுமதி ரூபா 540 மில்லியன் ஆகும். பின்னர் பலதடவை நடந்த பேரங்களை

அடுத்து இலஞ்சப் பணம் ரூபா 100 மில்லியனாகக் குறைக்கப்பட்டதாவும் அதில் முற்பணமாக ரூபா 20 மில்லியனை வாங்கும் போதே குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். மகாநாம சனாதிபதி செயலக அலுவலகத்தின் முக்கிய அதிகாரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதான் நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் அவர் காணி அமைச்சின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றிருந்தார். தான் காணி அமைச்சுச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்தும் அந்த அமைச்சில் தனக்குச் செல்வாக்கு இருப்பதாக இந்திய தொழிலதிபரிடம் சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது சந்தேக நபரான பி. திசநாயக்க, சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா அதிபராக இருந்த போது, அவரது செயலராக பணியாற்றியவர். தற்போது அரச மரக் கூட்டுத்தாபன தலைவராக இருக்கிறார்.

இதேபோல் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சாவின் சனாதிபதி செயலக முக்கிய அதிகாரி காமினி சேனரத் என்பவரும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைாயில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்.

இந்தக் கைதுபற்றி ஆணைக்குழு அதிகாரிகள் சனாதிபதி சிறிசேனாவுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி இருந்தார்கள் ஆனால் ஆளை அடையாளம் காட்டவில்லை. சனாதிபதி சிறிசேனா ஆள் யாராக இருந்தாலும் பதவிபற்றிக் கவலைப்படாது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆணைக் அதிகாரிகளைப் பணித்திருந்தார்.

இந்திய தொழிலதிபரிடம் ரூபா 20 மில்லியன் இலஞ்சதாகப் பெற்றுக் கொண்ட போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட, இந்த மூத்த அரச அதிகாரிகள் இருவரையும் பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இந்த பேரத்துடன் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவருக்கு கைது செய்யப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி முக்கிய பிரமுகருக்கும் பகிரப்படவிருந்தது என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இலஞ்சம் சிலங்காவில் அடிமுதல் நுனிவரை வியாபித்திருப்தைக் காட்டுகிறது. இதில் மகாநாம இதற்கு முன்னர் காணி அமைச்சின் செயலாளராக இருந்தவர். அப்போதே அவர் கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான பழைய இரும்பு மற்றும் இயந்திரங்களை விடுவிப்பதற்கு எதிராக செயல்பட்டதாகத் தெரிகிறது.

வெளிநாட்டு முதலீட்டார்கள் சிறிலாங்காவில் முதலீடு செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மூதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பின்வாங்குகிறார்கள்.

இது இவ்வாறிருக்க வட மாகாணத்தில் கொலை, கொள்ளை, வாள்வெட்டு, கஞ்சா கடத்தல் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கடல்வழியாக கேரளா கஞ்சா கிலோக் கணக்கில் கடத்தப்படுகிறது.

ஒன்றரை இலட்சம் இராணுவத்தையும் சிறப்பு படையணிகளையும் வடக்கில் நிறுத்தியுள்ள போதிலும் சட்டத்துக்கு முரணான சம்பவங்கள் குறைந்தபாடில்லை. யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவில்தான் போதைப்பொருள்களின் விற்பனை அதிகளவில் இடம்பெறுகின்றது. அவற்றுக்கு உடந்தையாக பொலிசாரே உள்ளனர் எனப் பல மட்டங்களிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்த ஆண்டு சனவரி 28 இல் கொழும்புத்துறை முகத்தீல் நங்கூரமிட்ட கப்பல் ஒன்றில் இருந்து அ. டொலர் 108 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர் இது எரித்து அழிக்கப்பட்டது.

நேற்று முந்தினம் வேலியே பயிரை மேய்வதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றோஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அப்பு என்பவர் ஆவா குழுவின் வினோத் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார் எனவும் கொள்ளைக் கும்பல்கள், வாள்வெட்டுக் குழுக்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள் ஆகியோருடனும் அவருக்குத் தொடர்பிருந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்தம் வழியாக அவர் மன்னாருக்கு இடமாற்றப்பட்டுள்ளார். உள்ளக விசாரணைகள் நிறைவடைந்ததும் பொலிஸ் உத்தியோகத்தர் அப்புக்கு எதிராக நீதிமநீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

மேலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் சம்மந்தப்பட்ட கும்பல்கள் மற்றும் போதைப் பொருள் கும்பல்களுடன் பொலிஸ் உத்தியோர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் றோஷன் பெர்னாண்டோ பணித்துள்ளார். அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர் அப்புவின் சட்ட விரோதச் செயற்பாடுகளைக் கவனிக்காது, அவருக்குத் துணை நின்ற யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமையக் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

2015 இல் ஆட்சி மாறினாலும் மகிந்த இராசபக்சா அவர்களின் ஆட்சியில் இருந்த அதே ஊழல் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தவர்கள், இராணுவத்தினர் தொடர்ந்து பணியில் உள்ளார்கள். முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா அவர்களிடம் ஒரு ‘நல்ல’ குணம் இருந்தது. அவரும் அவரது குடும்பமும் பாரிய ஊழலில் ஈடுபட்டிருந்தார்கள். அதே சமயம் கீழ் மட்டத்தில் நடந்தேறிய ஊழல்களை மகிந்தா இராசபக்சா கண்டும் காணமால் இருந்துவிட்டது.

வெளிப்படைக்கான பன்னாட்டு அமைப்பின் 2018 ஆண்டு அறிக்கை வரும் போது சிறிலங்கா ஊழல் தரவரிசையில் இன்னும் பல படிகள் முன்னேறும் என எதிர்பார்க்கலாம்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்