கிளிநொச்சியில் 6 சிறுவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பாடசாலைகளுக்கு செல்லாமலும், ஒழுங்கற்ற வரவுகளையும் கொண்ட 16 சிறுவர்களில் ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசலைகளுக்குச் செல்லாத அல்லது பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களை மீளக்கற்றலில் இணைக்கும் செயற்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கோயில் வயல், இயக்கச்சி, வண்ணாங்கேணி ஆகிய பகுதிகளில் நேற்று மேற்கொண்ட கள ஆய்வின் போது 16 சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாது கிராமங்களில் காணப்பட்டனர்.

இவ்வாறு சிக்கிய 16 சிறுவர்களில் 10 பேரின் பாடசாலை வரவுகள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எச்சிரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய ஆறு சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஆறு பேரையும் சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் பூநகரி பிரதேசத்திலும் 12 சிறுவர்கள் இவ்வாறு பிடிக்கப்பட்டு நான்கு சிறுவர்கள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்