20 ஆக உயர்ந்தது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; தொடர்கிறது மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.இரண்டு பேர் காணமற்போயுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.1,53,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.அமலநாதன் குறிப்பிட்டார்.

பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, தெஹிஓவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, மாவனெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நெலுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பூண்டுலோயா சவுத் மடக்கும்புற தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சவுத் மடக்கும்புற தோட்டத்தில் சுமார் 300 அடி உயரமான மலைக்குன்றில் கடந்த சில நாட்களாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தோட்டத்திலுள்ள மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, மொனராகலை – முப்பனாவௌி தோட்டத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரு குடும்பம் நிர்கதிக்குள்ளாகியுள்ளது.பாதிக்கப்பட்ட தம்மை அதிகாரிகள் பார்வையிடவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.சீரற்ற வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தமையால் ஜா -எல அணைக்கட்டில் நீர் வான் பாய்ந்துள்ளது.

இதன் காரணமாக அணைக்கட்டின் இரு மருங்கிற்கும் மணல் மூடைகள் இடப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட உதவிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த குறிப்பிட்டார்.

வௌ்ளம் ஏற்பட்டுள்ளதால் ஜா – எல அணைக்கட்டை அண்மித்து தாழ்நிலப்பகுதியில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர்பாசனத் திணைக்களத்தினரின் உதவியுடன் அணைக்கட்டுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட உதவிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்தார்.இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக   செய்தியாளர் குறிப்பிட்டார்.மண்மேடு சரிந்து வீழ்ந்தமையாலும் வௌ்ளத்தாலும் போக்குவரத்து தடைப்பட்ட சில வீதிகளில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

வீதிகளில் வீழ்ந்த கற்பாறைகள் மற்றும் மண்மேடுகள் என்பன தற்போது அகற்றப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கைகள் பிரிவு பணிப்பாளர் கமல் அமரவீர குறிப்பிட்டார்.

போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் முழுமையாக வீதிகள் புனரமைக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.இதேவேளை, வௌ்ளம் காரணமாக சேதமடைந்த குளியாப்பிட்டிய பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமல் அமரவீர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வௌ்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகளுடனான போக்குவரத்து தொடர்ந்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் கூறினார்.வௌ்ள நீர் வழிந்தோடிய பின்னர் குறித்த வீதிகளூடானா போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் கமல் அமரவீர சுட்டிக்காட்டினார்.நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதுவட மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமாரன் குறிப்பிட்டார்.நாட்டை சூழவுள்ள சில கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வானிலை அதிகாரி அறிவுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்