விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நீர்ப்பாசன திணைக்களம் !விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் ஒன்றுகூடிய உன்னிச்சை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளும் விவசாய குடும்பங்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிரான பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன், தமக்கான நிவாரணங்களை உரியவர்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

வாவிக்கரை வீதியில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியானது அந்தோனியார் ஆலய வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக உன்னிச்சைக்குளம் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசன குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. உன்னிச்சைக் குளத்தினை சிறந்த முறையில் நீர்ப்பாசன திணைக்களம் முகாமைத்துவம் செய்யாத காரணத்தினாலேயே இந்த நஷ்டம் ஏற்பட்டதாக இங்கு விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்