கிழக்கில் தமிழ்தேசியத்தை சீர்குலைக்க பல அமைப்புக்கள் உதயம்

வடகிழக்கு தாயக அரசியல் விடுதலைக்காக காலம் காலமாக குறிப்பாக ஏழு சகாப்தங்களாக ஈழத்தில் தமிழர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.

அதில் தந்தை செல்வாவின் மூன்று சகாப்தம் அகிம்சைரீதியான உண்மை போராட்டத்தை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக்கட்சி அரசும்,ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசும் உதாசீனம் செய்ததன் விளைவாகவே 1974,மே,14,ம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் தந்தை செல்வாவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டு தமிழீழமே தீர்வு என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடுத்து ஈழத்தில் 36,விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆனால் காலப்போக்கில் அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தம் 13,வது அரசியல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய கடந்த 1987 யூலை 22,ம் திகதிக்குப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் தவிர்ந்த ஏனய 35 தமிழ் இயக்கங்களும் தமது செயல்பாட்டை முற்றாக நிறுத்தியதும் சில இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்ததும் வரலாறாகும்.
ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பரினாம வளர்ச்சி 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப்பின் மாமெரும் நாற்படையணியாக வளர்ச்சி பெற்றது நாற்படை என்பது

1)தரைப்படைஅணி
2)கடல்படை அணி
3)வான்படை அணு
4)தற்கொடைப்படை அணி

இவ்வாறான வளர்ச்சியுடன் வடக்கு கிழக்கு தாயகத்தில் 70,சதவீத நிலப்பரப்பை தன்னகத்தே வைத்து ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி ஒரு நடைமுறை அரசை உருவாக்கிய பெருமையும் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே உண்டு.
நடைமுறை அரசில் சகல கட்டமைப்புக்களையும் தனியாக நிர்வகித்த வரலாறும் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே உண்டு அது போக்குவரத்து,வங்கி,சுகாதார,கலைபண்பாடு கல்வி,தனியான ஊடகம்(வானொலி,தொலைக்காட்சி,பத்திரிகை,இணயத்தளம்,) பொருண்மியம், என பல்வேறு துறைசார்ந்த பிரிவுகளை தன்னகத்தே அமைத்து அந்த நடைமுறை அரசு இருந்தது.

குறிப்பாக வடகிக்கு பகுதிகளில் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் என இலங்கை அரசால் வரையறுத்து கூறப்பட்ட நடைமுறைகளும் அந்தந்த பிரதேசத்துக்கு அனுமதியட்டை வழங்கிய காலமாகவும் அந்தந்த எல்லைகளில் விடுதலைப்புலிகளின் சோதனை சாவடிகள் இலங்கை அரசின் சோதனை சாவடிகள் என ஒருநாட்டில் இரண்டு படையணிகள் இருந்த வரலாறும் உண்டு.
ஆனால் உலகத்தின் ஒத்துழைப்புடன் சுமார் 22,நாடுகளை கொண்டு மிகவும் அரக்கம்தனமான இனப்படுகொலை அரங்கேற்றம் கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் 2009,மே 18,வரை எமது வடகிழக்கு எங்கும் இடம்பெற்று இறுதியாக அந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் விடுதலைப்புலிகள் மௌனமானார்கள்.
அந்த மௌனம் என்பதை தொடர்ந்து விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக அரசியல் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பு அதன் தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையில் வடகிழக்கு இணைந்த சுய நிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வை வேண்டிய அரசியல் செயல்பாடுகள் நடத்து கொண்டு இருக்கின்றன அதற்கான முடிவு அல்லது தீர்வு என்பவைகள் இலங்கை அரசினால் வழமைபோலவே இருத்தடிக்கப்பட்டாலும் வடகிழக்கு தமிழ்மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வடகிழக்கில் உள்ள அநேகமான அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் ஏதோ ஒரு வழியில் செயல்படுகின்றனர்.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் மௌனத்திற்குப்பின் தமிழ் தேசிய சிந்தனை தமிழ்தேசிய உணர்வுகளில் இருந்து தமிழர்களையும் குறிப்பாக இளைஞர்களையும் பிரித்து அபிவிருத்தி வேலைவாய்ப்பு என்பவற்றுடன் பிரதேச வாதக்கருத்துக்களை முன் நிறுத்தி அதனூடான எண்ணக்கருத்தை விதைக்கும் அற்ப சலுகை அரசியலுக்கு இளைஞர்களை ஈந்து இழுக்ககூடிய நகர்வுகளை கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை தளமாக வைத்து கையாளக்கூடிய விரதமாக பல பணப்பரிமாற்றத்துடன் கூடிய சிலர் பின்புலத்தில் இருந்து செயல்படுகிறார்கள் என்பது காணமுடிகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் அதற்காக எல்லாத்தமிழ் கட்சிகளும் ஒரு குடையில் இணையவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து கிழக்குதமிழர் ஒன்றியம் என்ற பெயரில் ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பிரசாரங்களை முன்எடுத்து ஒருசாரார் செயல்படுவதுடன் இன்னொரு சாரார் எமது தலைமுறை கட்சி என்ற பெயரில் ஒரு ஊடக சந்திப்பும் இடம்பெற்றது இந்த ஊடக சந்திப்பை நடத்தி அந்த புதிய கட்சி தலைவர் செயலாளர் பொருளார் என தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் ஏற்கனவே கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக இருந்த ஏறாவூரை சேர்ந்த ஹாபீஷ் நஷீர் அகமட் என்பவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
அவர்களால் உருவாக்கப்பட்ட எமது தலைமுறை கட்சியின் கொள்கை விழக்க உரையில் வடக்கு கிழக்கு இணைக்கவேண்டும் என்பது அறிவீனமானவர்களின் வாதம் எனவும் வடக்குகிழக்கு இணைக்ககூடாது என்பதே தமது நிலைப்பாடு என்ற தொணியில் அவர்களின் சந்திப்பு இருந்ததை காணமுடிகிறது.
இதே போலவேதான் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவுக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) எப்போதுமே வடகிழக்கு இணைப்புக்கு எதிரான கொள்கையுடன் செயல்படும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஒரு குடையின்கீழ் ஒரு பொது சின்னத்தில் எல்லா தமிழ் கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்பவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பு மூலம் எல்லோரும் ஒன்றாய் தேர்தலில் போட்டியிடுவோம் என்ற கருத்தை முன்வைக்க வில்லை குறிப்பாக கிழக்குமாகாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் எல்லா தமிழ் கட்சிகளும் வடகிழக்கு தாயகத்தை கொள்கையாக ஏற்று செயல்பட முன்வருவார்களானால் அதை பரிசீலிப்பதற்கு சிலவேளை முன்வரலாம் அப்படி அன்றி கிழக்கு மகாணத்தை மட்டும் முன்நிறுத்தி அரசியல் பணி செய்வதை தமிழ்தேசியகூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் என யாராவது நினைத்தால் அது அவர்களின் அறிவீனமே அன்றி வேறில்லை.

தற்போது கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதத்தை தூண்டி தமிழ்தேசிய உணர்வை மழுங்கடித்து எதிர்வரும் கிழக்குமாகாணசபை தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பின் செல்வாக்கை குறைப்பதற்கான கூட்டுச்செயல்பாடுகள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு அது பரவலாக பல அமைப்பு பெயர்களில் இயங்குவதற்கான ஒன்றாகவே தற்போது முளைத்துள்ள கிழக்கு அமைப்புக்கள் புதியகட்சிகள் அதன்பின்னால் வழிநடத்தும் முஷ்லிம் அரசியல் வாதிகள் தமிழ் பிரமுகர்களின் போக்குகளை அவதானிக்கமுடிகிறது.
இதில் கிழக்குமாகாண தமிழ் மக்கள் அவதானமாகவும் நிதானமாகவும் சிந்துத்து செயல்படாவிட்டால் கிழக்குமாகாணம் தமிழ்தேசியவிடுதலைக்கான சிந்தனையில் இருந்து விலகி பேரினவாத அபிவிருத்தி சிந்தனையை வளர்க்ககூடிய தளமாக எதிர்காலத்தில் கிழக்குமாகாணம் மாறும் இது கடந்த காலம் எமக்காக எமது மண்ணுக்காக உயிர் நீத்த மாவீர்ர்களுக்கு நாம் செய்கின்ற துரோகமாகவே அமையும்.

கிழக்குவாழ் தமிழ்மக்கள் வடகிழக்கு தாயகம் தேசியம் என்ற நோக்குடன் தமிழ்தேசியத்தை பலப்படுத்தும் அரசியலுக்கா அற்பணிப்புடன் செயல்படவேண்டியது காலத்தின் தேவை.

முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டு ஒன்பது வருடம் கடந்த நிலையில் சிலர் இன்று கிழக்குமாகாணத்தை வடக்கில் இருந்து பிரிப்பதற்கான பிரதேசவாத அரசியல் மேற்கொள்வதை கிழக்குவாழ் மக்கள் இனம்கண்டு அந்த பரப்புரைகளை முறியடித்து தொடர்ந்தும் தமிழ்தேசியம் வெற்றிபெற உழைப்பதே காலத்தின் கட்டாயதேவை.

-பா.அரியநேத்திரன்-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்