சுவிஸில் கோலாகலமாக இடம்பெற்ற தேர்திருவிழா! வெள்ளை மயிலை கண்டு வியந்த மக்கள்

ஐரோப்பாவில் வெள்ளை மயிலை தன்னகத்தே கொண்டு பிரசித்தி பெற்ற சுவிட்ஸர்லாந்து செங்காலன் சென்.மார்க்கிறத்தன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 9ஆம் திருவிழாவான தேர் உற்சவம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த 25ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவத்தில் தொடர்ந்து உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

மகோற்சவத்தில் 2ம் திருவிழா சட்கோணக்காட்சி கொடுத்து வேதபாராயணத்துடனும், 3ம் திருவிழா சக்திரூபக்காட்சி கொடுத்து திருமுறைப்பாராயணத்துடனும், 4ம் திருவிழா குருந்தமரத்திருவிழாவாகவும், 5ம் திருவிழா கப்பல் திருவிழாவாகவும், 6ம் திருவிழா மாம்பழத் திருவிழாவாகவும், 7ம் திருவிழா வேட்டைத்திருவிழாவாகவும், 8ம் திருவிழா சப்பறத்திருவிழாவாகவும், 9ம் திருவிழா தேர்திருவிழாவாகவும், 10ம் திருவிழா தீர்த்த்திருவிழாவாகவும் சிறப்புற பக்திபூர்வமாக இடம்பெற்றன.

தேர்திருவிழா இன்று காலை 7 மணியளவில் விசேட அபிசேகம், பூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன இடம்பெற்று கதிர்வேலர் உள்வீதி வலம் வந்து முற்பகல் 11 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.

ஆலய வாறிலை பதிர்வேலர் அடைந்து தேர் ஏற ஆயத்தமானபோது கடும் வெப்பமான காலநிலை நிலவியது. கதிர்வேலர் தேரில் அமர வருணபகவான் வாழ்த்துக்கூறுவது போன்று மழை சிறிதாக பொழிந்து கொண்டிருந்தது. பகத்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வருணபகவானுக்கு நன்றி கூறியமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்தியாவிலிருந்து வருகைத்தந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் பிரதம சீடர் சுவாமி ஜோதிரம்யா அவர்கள் தேர்திருவிழாவில் கலந்துகொண்டு அருளுரை வழங்கினார். டென்மார்க்கில் இருந்து வந்த செங்கதிர் குழுவினர் பக்கவாத்திய சகிதம் இசைக்கச்சேரி நடத்தினர்.

சுவிஸ் நாட்டில் சகல மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும், அடி அழித்தும் தமது நேர்த்திகளை பூர்த்தி செய்தனர். ஆலய நிகழ்வுகளை சிவநெறிச் செல்வர் செந்தில்நாதன் சிறப்பாக தொகுத்து வழங்கி வைத்தார்.

யாக சாந்தி நிலையங்களும் வர்த்தகர்களின் அங்காடிகளும் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்திருவிழாவன்று தேரில் கதிர்வேலர் இருப்பிடம் திரும்பிய பின்னர் இடம்பெற்ற பிராயச்சித்த அபிசேகத்தின்போது பக்தர்கள் வழங்கிய காணிக்கை தாயகத்தில் இன்னல்படும் உறவுகளுக்கு அனுப்பி உதவவிருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதேவேளை, மகோற்சவத்தின் 10ம் நாள் திருவிழா தீர்த்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. காலை 7 மணியிலிருந்து விசேட அபிஷேகம், பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்றன.

வெளிவீதியில் அமைக்கப்பட்டிருந்த புஷ்பகேணியில் கதிர்வேலர் நீராடி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கினர். தீர்தமாடிய பின் ஆலயம் திரும்பிய கதிர்வேலருக்கு யாகபூஜை முடிந்து நவதானிய பயிர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இரவு கொடியிறக்கம், ஊஞ்சல் பாட்டு ஆகியன இடம்பெற்றன. திங்கட்கிழமை திருக்கல்யாணம், மறுநாள் வைரவர் மடை ஆகியவற்றுடன் உற்சவம் இனிதே முடிவடைகின்றது.

இதன்போது, ஆலயத்தில் தனியான கூட்டில் வளர்க்கப்படும் வெள்ளை மயிலை பெரும்பாலானவர்கள் பார்வையிட்டு வியப்படைந்தனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அம்சமாக புலம்பெயர் தமிழ் உறவுகளுடன், சுவிஸ் நாட்டு மக்களும் பங்கேற்று, ஒன்றுபட்டு வாழும் சுவிஸ் நாட்டின் இலக்கு வெற்றிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்