27 ஆண்டு கடந்தும் மறக்கமுடியாத வடு மகிழடித்தீவு படுகொலை

மகிழடித்தீவுக் கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்திலே பட்டிப்பளைப் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இக்கிராமம் 1991.06.12ம் திகதி தீயில் எரிந்தது. 1987.01.28 இடம்பெற்ற இறால்பண்ணை படுகொலையில் இருந்து மீண்டெழாதிருந்த மக்களுக்கு மீண்டும் ஓர் அவலமாக இது குறிப்பிடப்படுகின்றது.

1991 காலப்பகுதியில் இராணுவத்தினர் இங்கு தமது இருப்பிடங்களை அமைத்திருந்தனர். கொக்கட்டிச்சோலை படைமுகாமிலிருந்த இராணுவப் படையினர் தமது உணவுப்பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை மண்முனைத் துறையூடாகச் சென்று நகரில் கொள்வனவு செய்து வருவது வழக்கம். அவ்வாறு செல்லுகையில் படையினர் மண்முனைத் துறை தொடக்கம் கொக்கட்டிச்சோலை வரையும் வீதியில் காவல் கடமையில் நிற்பது வழக்கம்.

வழமைபோல் 1991.06.12 ம் திகதியும்; படையினர் தமது பொருட்களை கொள்வனவு செய்து வர சென்றிருந்தனர். அவர்களின் காவலுக்காக வழக்கம் போல் படையினர் வீதியில் நின்றனர். கொக்கட்டிச்சோலை பகுதியிலிருந்து மண்முனைத் துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த படையினரின் உழவு இயந்திரமொன்று மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் மீனாச்சியடி எனும் இடத்தில் நிலக்கன்னி வெடியில் சிக்கியது. இது நண்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றது. இச் சத்தத்தினைக் கேட்ட பிரதேச மக்கள் பயந்து போனார்கள். இத்தாக்குதலின் போது படையினர்களில் ஒருவர் இறந்ததுடன் மற்றொருவர் காயமடைந்தார்.

இச்சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த படையினர் கண்மூடித்தனமாக மகிழடித்தீவுக் கிராமத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால்; என்னசெய்வதென்று தெரியாது கிராமமக்கள் நாலாதிசைகளுக்கும் ஓடினர். வீதியால் ஓடிக் கொண்டிருந்தவர்களை நோக்கியும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதனால் வீதியில் சுருண்டு வீழ்ந்து இறந்தனர். நாலா திசையும் ஓடியவர்கள் கிராமத்தை விட்டு செல்ல முடியாதவாறு படையினர் சுற்றி வளைத்து நின்றதுடன் தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகம் செய்த வண்ணமே இருந்தனர். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளில் சேர்ந்து கொண்டனர்.

இச்சம்பவம் இடம்பெற்ற வீதியின் எதிர்ப்பக்கமான வீதியினூடாகவே இவர்கள் கிராமத்திற்குள் உள்நுழையும்போதே வீடுகளுக்கு தீ வைத்துக் கொண்டே சென்றதுடன் மக்களையும் சுட்டுக்கொண்டே சென்றார்கள். அப்போது மக்கள் வீடுகளுக்குள் ஒளிந்திருந்தனர். அவ்வாறு செம்பாப்போடி அவர்கள் வீட்டிலும் இருந்தார்கள். இருந்தவர்களில் விறாந்தையில் இருந்த சுப்பிரமணியம் (வயது 70) அவரை சுட்டனர். அப்போது அங்கு இருந்த எல்லோரும் பெரும் பயத்துடன் கடவுளை நேர்ந்தபடி வீட்டினுள் சத்தங்கள் எதுவுமின்றி இருந்தார்கள்;. அதேபோல் அருகாமையில் உள்ள ஞானமுத்து. குமாரநாயகம் என்பவரின் வீட்டில் பலர் ஒன்று சேர்ந்து இருந்தனர். இவ்விடத்திற்குச் சென்ற படையினர் மேலும் அயல் வீடுகளில் இருந்தவர்களையும் அழைத்து வந்து அனைவரையும் ஒன்றாக இருக்கும் படி கூறினார்கள். அங்கு இருந்த பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தி அவர்கள் உறுப்புக்களை வெட்டியதுடன் அவர்களை நோக்கி சுற்றி நின்ற படையினர் சுடத்தொடங்கினர். ஒரே மரண ஓலம். வீடு இரத்த வெள்ளத்தில் மூழ்கியது. ஆண்கள், பெண்கள்,குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வித்தியாசமின்றி பலர் அவ்விடத்தில் கொல்லப்பட்டனர். சிலர் குற்றுயிராக துடித்துக்கொண்டிருந்தனர். அதே நேரம் மாட்டு வண்டி செலுத்திய வண்ணம் ஓர் இளைஞன் வர அவனையும் அதே ஒழுங்கையில் பிடரியை பிடித்திழுத்தவாறு வர அதனைக் கண்ட மனைவி ஓடி வர அவனையும் அவளையும் அவ்விடத்திலே படையினர் சுட்டுக் கொன்றனர்.

மேலும் இத்துப்பாக்கி பிரயோகத்திலிருந்து ஒரு சிலர் தந்திரமாகத் தப்பிச் சென்றனர். அவ்வாறு தப்பிச்செல்ல முற்பட்டவர்களில் ஒருவர் வேலாப்போடி அலையப்போடி படையினரிடம் மாட்டிக் கொண்டார். எனினும் தனக்கும் இதே கதிதான் நடக்கப்போகின்றது என எண்ணிய அவரை குமாரநாயகத்தின் வீட்டுக்கு கொண்டு வந்தனர். அந்த வேளையில் குற்றுயிராகக் கிடந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்குமாறு படையணியினர் இவரிடம் கூறினர். இதனால் கிணற்றிலிருந்து நீரை எடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார் அவர்.

இரத்த வெள்ளத்தையும் சடலங்களையும் பார்த்தபோது அவருக்கு தலை சுற்றிய போதும் அரை உயிருடன் கிடந்து தண்ணீர் கேட்டவர்களுக்கு இரத்த வெள்ளத்தில் நின்று கொண்டு தண்ணீர் கொடுத்தார்;. தண்ணீர் கொடுத்து முடிந்ததும் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்கள் என்று அவர் எண்ணினார். ஆனால் நடந்ததோ பரிதாபம். அந்த வெறிபிடித்த படையினர் அவர் கண்முன்னாலேயே அவர்களை சுட்டுக் கொன்றனர்.

இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்களை ஒன்று சேர்க்குமாறு படையினர் அவரிடம் கூற அதையடுத்து அயல் வீடுகளில் இருந்து ஓலை மட்டை, விறகு என்பவற்றை எடுத்து வந்து அவர்களுக்கு மேல் போடுமாறு உத்தரவிட்டனர். அதனை மறுக்கமுடியாது அலையப்போடி அவ்வாறே செய்தார். இதனை அடுத்து அருகிலிருந்த அரிசி ஆலையில் இருந்த டீசலை எடுத்து வந்து சடலங்களின் மேல் ஊற்றி தீ வைத்தனர். அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அவரை எவ்வாறு விட்டு வைத்தார்களோ தெரியவில்லை. அத்தனை சடலங்களும் எரிந்து கொண்டிருந்தன.

இவ்வாறு பல சடலங்கள் இங்கு எரிக்கப்பட்டன. அத்துடன் வீடுகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. எரிந்து கொண்டிருந்த வீட்டுகளுக்குள் சடலங்கள் தூக்கி வீசப்பட்டன. இவ்வாறு பாரிய படுகொலையினை படையினர் செய்தனர். ஊருக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த பெண்களை அருகில் இருந்த வீட்டுக்குள் இழுத்துச் சென்று படையினர் பாலியல் வல்லுறவிற்கும் உட்படுத்தினர்.

சிலர் சந்தோஷம் அவர்கள் வீட்டில் இருந்தார்கள். அங்குவந்த இராணுவத்தினர் எல்லோருக்கும் அடித்தார்கள் குழந்தைகள் என்றும் பார்க்கவில்லை கற்பவதிகளையும் பார்க்கவில்லை அடித்தார்கள் வயிற்றில் உதைத்தார்கள். அவ் வீட்டையும் தீமுட்டினார்கள். பின்னர் அங்கிருந்த மக்கள் தம்பையா அவர்கள் வீட்டில் தஞ்சமடைந்தார்கள் அங்கும் வந்தும் விரட்டியடித்து கோயிலுக்குள் அனைவரையும் கொண்டு சென்றார்கள். துவக்கினால் வான்நோக்கி சுட்டார்கள். தாயே காப்பாற்று என அழுதுகொண்டே இருக்கும்போது அடியும் உதையும் மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிள்ளைகள் பசியால் அழுவது ஒருபக்கம். சில இராணுவத்தினர் காடையர்களாகவே நடந்து கொண்டனர். பொதுமக்கள் மேல் ஏறி நடந்தார்கள். பின்னர் ஜந்து மணியளவில் இராணுவத்தினர் அவ்விடம் விட்டுச் செல்லவே மக்கள் அவ்விடம் விட்டு வெளியேறி அயல் கிராமங்களுக்கு சென்றார்கள்.

சில வீடுகளில் சிறு பிள்ளைகள் சோளம் விதைப் பெட்டியினுள் ஏறி இருந்தார்கள். ஒருசிலர் நெல்மூட்டைகளின் இடைவெளிகளில் புகுந்து ஒளிந்து கொண்டனர். சிலர் வீட்டு வளைகளில் இருந்தனர். கடவுளே கடவுளே என்று நடுங்கிக்கொண்டு எல்லோரும் இருந்தனர். கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலே மூலைகளுக்குள்; இருந்தனர். வீட்டினுள் இருந்தவர்கள் வெடிகளின் சத்தம் ஓய்ந்த பின்னர் அவர்கள் வெளியில் 5 மணியளவில் வந்து பார்க்கும் போது ஊரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. பின்னர் கிராமத்தினுள் இருந்த அனைவரும் அயல் கிராமத்திற்கு ஓடினார்கள்.

மேலும் அருகிலுள்ள முதலைக்குடா ஸ்ரீ கோபால் மகாவித்தியாலயத்திலும் மக்கள் பாதுகாப்புத்தேடி தஞ்சமடைந்தனர். அங்கு சென்ற படையினரும் அங்கிருந்த ஆண்களை வேறாக அழைத்து வரிசையாக கொண்டு சென்று கன்னி வெடி இடம் பெற்ற இடத்திற்கு கொண்டு சென்று சுட்டுக் கொண்ட பின்னர் தீயிட்டு எரித்தனர்.

அழகிய அந்தக் கிராமம் அலங்கோலமானது. எங்கும் பிணவாடை வீசியது. அங்காங்கே மரண ஓலங்கள் எழுந்து கொண்டிருந்தன. வயல் வேலைகளுக்கும் ஏனைய வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலை சென்றவர்கள் தமது கிராமத்திற்கு நடந்த விபரீதத்தை அறிந்தாலும் அங்கு செல்ல முடியாது. அயற்கிராமங்களில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிகூட அறிய முடியாதவர்களாக திண்டாடினர். மறுநாள் காலை 10 மணியளவில் அம் மக்கள் கிராமத்தை நோக்கி வரும்போது கிராமமே மயாணம்போல் காட்சியளித்தது. எல்லாப் பக்கங்களிலும் அழுகைக்குரல்களும் இரத்த வாடைகளும் காற்றுடன் கலந்து வந்து கொண்டிருந்தன.

இச் சம்பவத்தில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருந்தனர். ஆறு மாதக் குழந்தை தொடக்கம் வயோதிபர் வரை படுகொலை செய்யப்பட்டனர். பலரைக் காணவில்லை. 150 க்கு மேற்பட்ட வீடுகள் தீயில் எரிக்கப்பட்டன. மொத்தத்தில் கிராமமே அழிந்தது. ஒரு படையினன் கொல்லப்பட்டதற்காக 100க்கு மேற்பட்ட பொதுமக்களைப் படுகொலை செய்தும் சொத்துக்களை அழித்ததும் வெறும் ஆத்திர மேலீட்டினால் மாத்திரம் நடந்ததல்ல. அந்த பகுதியில் மக்களை திட்டமிட்டு அழிக்க வேண்டுமென சந்தர்ப்பத்தினை பார்த்திருந்த படையினருக்கு இக் கன்னிவெடி அதற்கான சூழலை ஏற்படுத்தியது என்பதே உண்மை. இன்றும் இதன் வடுவில் இருந்து மீழ முடியாதவர்களாகவே மக்கள் உள்ளனர்.

மகிழையாள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்