மாவையிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாக கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட கடத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி கடலட்டை பிடிப்பதைக் கண்டித்து நேற்று யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் கவனயீர்ப்புப்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை வெளியேறுமாறு ஒரு சிலர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவர், அவ்விடத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்….,

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்கள் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களும் இனைந்து கடலட்டை பிடிப்பவர்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியுள்ளோம். இப்பிரச்சினை குறித்து எதிர்வரும் புதன்கிழமை வரைக்கும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அவகாசம் கோரியுள்ளார். அதே போன்று வடமாகாண ஆளுநரும் புதன்கிழமை சந்திப்பதாக கூறியுள்ளார். அவருடைய முடிவுக்காகவும் காத்திருக்கிறோம். இப் போராட்டத்திற்கு வடக்கிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். இப் போராட்டத்தின் போது எங்களுடைய சம்மேளனத்தில் சில அசம்பாவிதம் நடைபெற்றுள்ளன. அது சில கட்சிகளுடைய தூண்டுதலினாலேயே இவை நடைபெற்றுள்ளன.

இச் சம்பவத்திற்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா எம் பி யிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றோம். உண்மையில் நாங்கள் தான் அவரை அழைத்திருந்தோம். சரி பிழைகளுக்கு அப்பால் கட்சியின் தலைவர் ஒருவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது அவர் அவமதிக்கப்பட்டமைக்கு மனம் வருந்துகின்றோம்.

இப் போராட்டமானது மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக இருக்கும் இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடய ஆதரவையும் கோரியிருக்கின்றோம். கட்சியினுடைய ஆதரவு எமக்குத் தேவை மாகாண சபை, பாராளுமன்றம் போன்ற இடங்களில் குரல் கொடுக்கக்கூடியவர்கள் வேண்டும். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் போராட்டத்தை நடத்த முடியாது. எமது போராட்டத்திற்கு முடிவு கிடைக்காவிட்டால் இன்றோடு விடமாட்டோம். அவர்களை ரீதியாகவே இதனை செய்துள்ளோம் எமது தொழிலாளர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். அவர்களுடைய போராட்டத்தை அடக்குவது கடினமாக இருக்கும். அவர்களுடைய கிளர்ச்சியை இந்த அரசாங்கம் சந்திக்கும் என்றார்,

இது தொடர்பில் சம்மேளன செயலாளர் அ. அன்னராசா கருத்துத் தெரிவிக்கையில்….,

இப் போராட்டத்தின் போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர் அலுவலகம், யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலகம் என்பவற்றில் மகஜர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி அட்டைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றமையை கண்டித்து இப் போராட்டம் நடக்கப்பட்டது.

இத் தொழிலில் சிலர் அறுமதியைப் பெற்றும் சிலர் பெறாமலும் முறைப்படியாக தொழிலை செய்யாது அங்கு தங்கியிருப்பவர்கள் சுகாதார ரீதியற்ற முறையில் நடந்து கொள்வதாக அப் பகுதி மக்கள் முறையிட்டு வருவதுடன் இந்த தொழிலினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருதவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இவர்களினால் கடல் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் சம்மேளத்திற்கு தொடர்ச்சியான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுவந்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்ழமை யாழ். மாவட்டத்தில் கடற்தொழிளர் கூட்டுறவுச் சங்கங்கள், சமாசங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் அதிகாரிகளுக்கு மகஜர் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அமைவாக போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இப் போராட்டத்தின் போது ஒரு சில அசம்பாவிதங்களும் நடைபெற்றுள்ளன. குறிப்பாக இங்கு வருகை தந்த தமிழரசுக் கட்சித் தலைவரை வெளியேற்றுமாறு கூக்குரலிடப்பட்டது. இது தவறு என்பது தாங்கள் தெரிவிக்கின்றோம். இனிவரும் காலங்களில் இவ்வாறு நடைபெற மாட்டாது எனவும் தொடர்ந்தும் எமது மக்களுக்காக குரல் குடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்