நுரையீரலுக்குள் நுழைந்த ஆட்லறி சிதறல்-யாழ் போதனாவில் அகற்றல்

முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒருவருக்கு, ஆட்லறி எறிகணையின் சிதறலொன்று சுவாசக்குழாயை தாக்கியிருந்தது. சுமார் 50 கிராமுடைய அந்த சிதறலுடன் கடந்த 9 வருடங்களாக சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார். நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த சத்திர சிகிச்சையின் மூலம், சுவாசக்குழாய்க்குள்ளிருந்த சிதறல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் நீண்டகாலத்தின் பின் இப்படியான சத்திரசிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதிற்குட்பட்ட இளைஞனிற்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் ஆட்லறி வகை குண்டின் சிதறலென நம்பப்படும் குண்டுச்சிதறலொன்று அவரது சுவாசப்பையை தாக்கியது. வலது தோள்மூட்டுக்கு கீழே முதுக்குப்புறமாக உள்நுழைந்துள்ளது. யுத்தத்தின் இறுதியில் பொதுமக்களுடன் வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றார். குண்டின் பகுதி தாக்கியதாக கருதி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
“நாளாக காயம் மாறியது. ஆனால் அதன்பின் என்னால் பாரமான வேலைகள் செய்ய முடியவில்லை. நிமிர்ந்தோ சரிந்தோ படுத்துறங்க முடியவில்லை . குப்புற படுக்கவே முடியும். இருமல் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இருமல், சளித் தொல்லை அதிகளவில் இருந்தது.
2011 இல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றேன். எனது நெஞ்சுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த பின்னர், இரும்புத்துண்டொன்று சுவாசப்பாதையில் உள்ளதை சொன்னார்கள்.” என்றார் அந்த இளைஞன்.

பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மேலதிக சிகிச்சைகளிற்காக கொழும்பிலுள்ள இரண்டு வைத்தியசாலைகளிற்கு சென்றும் சிகிச்சைபெற முடியாமல் திரும்பி வர வேண்டிய நிலைமையேற்பட்டது.
பின்னர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஒன்றரை மாதங்களின் பின் யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். சத்திரசிகிச்சை நிபுணர் எஸ்.முகுந்தன் அவரை பரிசோதித்து சத்திரசிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுத்தார்.
“கடந்த வியாழக்கிழமை சுமார் 6 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை செய்து அந்த இரும்புத்துண்டு அகற்றப்பட்டது. வலதுபுற நுரையீரல் சுவாசக்குழாயில் அந்த சிதறல் தங்கி நின்றுள்ளது. அது சுவாசப்பை ஊடாகவே நுரையீரலுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அது எப்படி நகர்ந்ததென்பது சிவித்திரமாகவே உள்ளது. குண்டு சிதறல் தங்கியிருந்த பகுதியில் சுவாசக்குழாய் விரிவடைந்து சேதமடைந்து, அதில் சளி தேங்கி அவருக்கு சிரமத்தை கொடுத்துள்ளது. அந்த இரும்பு குண்டு சிதறல் சுமார் 50 கிராம் நிறையடையது என்றார் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்த நிபுணர்.

மயக்க மருந்து நிபுணர் பிறேமகிருஸ்ணா தலைமையிலான குழு, தாதியர் குழு, மருத்துவ உதவியாளர் குழு ஆகியவற்றின் உதவியுடன் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்