கூட்டமைப்பு, மு.காவையும் உள்ளீர்க்க வேண்டும் என்று வடக்கில் தீர்மானம்

கொழும்பு அரசால் உருவாக்கப்பட்டுள்ள சிங்கள, முஸ்லிம் சிறப்புச் செயலணியில் வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றையும் இணைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 124ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் இது தொடர்பில் சிறப்புப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார்.
“கூட்டரசால் உருவாக்கப்பட்டுள்ள சிங்கள, முஸ்லிம் செயலணி அமைச்சு மட்டத்திலான வேலைத்திட்டங்களையே செய்கின்றது. யாருக்கு வீடுகள் வழங்க வேண்டும், என்ன அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை அவர்களே தீர்மானிக்கின்றனர். இதை ஏற்க முடியாது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்கின்றது. செயலணியில் தமிழ்க் கூட்டமைப்பின் ஒரு பிரதிநிதிகூட உள்ளடக்கப்படவில்லை. முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை நுணுக்கமாக ஆராய்ந்து தீர்த்துவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் செயலணியில் இணைக்க வேண்டும்” – என்றார் அஸ்மின்.
இதனையடுத்து உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. அவர்களின் ஆதரவுடன் பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்