அமெரிக்காவுக்கு கனடா பதிலடி

இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா ஒரு போதும் பின்வாங்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரும்பு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக 2 பில்லியன் கனேடிய டொலர்கள் வரையிலான உதவிகள் வழங்கப்படும் என்னும் திட்டம் ஒன்றினை கனடா கொண்டுவந்துள்ளது.

மேலும் 16.6 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஜுலை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றன.

கனடாவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்காவின் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களை குறிவைத்தே இருக்கின்றன எனவும் வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கிரிஸ்டியா ப்ரீல்லாண்ட் தெரிவித்துள்ளார்.

எங்களின் இந்த அணுகுமுறையானது நிலைமையை தீவிரமாக்காது என்ற போதிலும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும், ஒன்றுக்கொன்று உயர் வர்த்தக பங்காளிகளாக உள்ள போதிலும் பல்வேறு விவகாரங்களால் இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகள் தற்போது பதற்றம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்