கல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்

நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அபயம் தேடி மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றனர். இவர்கள் தமது உறவுகளைப் பிரிந்தும் கொட்டும் பனியில் அல்லல்பட்டு உழைத்த பணத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு வழங்க மறக்கவில்லை. இத்தகைய உதவிகளில் ஒன்றையே சம்மாந்துறை மண்ணில் பிறந்து லண்டனில் தற்சமயம் வாழும் வேலாயுதப்பிள்ளை இந்திரன் மேற்கொண்டுள்ளார். இவரின் கல்விக்கான உதவி எமது சமூகத்திற்கான நீண்டகால முதலீடாகும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் ஐந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.விஜயகுமாரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உப தலைவர் க.கனகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு எம்.இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில், கடந்தகால போர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் எமது சமுதாயம் எழுந்து நிற்க வேண்டுமாயின் எவராலும் அழித்துவிட முடியாத கல்விச் செல்வத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கல்வி இல்லாவிட்டால் எமது தமிழினத்தின் இருப்பு இந்நாட்டில் இல்லாமல் போயிருக்கும். கல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் லண்டனில் வாழும் வே.இந்திரன் குடும்பத்தாரைப் போன்று எமது சமுதாயத்தின் கல்வி, சமூக, சமய, பொருளாதார மேம்பாட்டுக்காகவும் கலை, கலாசாரங்களைப் பாதுகாப்பதற்காகவும் உதவிகளை நல்க முன்வந்தால் மீண்டும் நாம் இழந்தவற்றை படிப்படியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
அன்று நான் அரசியல் அதிகாரத்துடன் இருந்த போது எனக்குக் கிடைத்த வரவு செலவுத்திட்ட நிதியில் பெரும் பங்கை கல்விக்காகவும், போர்ச்சூழலால் கணவனை இழந்து பரிதவிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சுயதொழில் முயற்சிக்காகவும் உதவியுள்ளேன். இதனையே நான் இன்றும் மேற்கொண்டு வருகின்றேன். அதே வேளை இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக எனது சக்திக்கு உட்பட்ட வரை பல்வேறுபட்ட பணிகளை மேற்கொண்டுள்ளேன்.எதிர்காலத்தில் மீண்டும் எனக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் இத்தகைய பணிகளை தொடரவுள்ளேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்