கிளி. முருகானந்தா கல்லூரி மாணவர்களின் முன்னுதாரணமான செயல்!

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் ஊடக கற்கை மாணவர்கள் முரசறை என்ற சுவர் பத்திரிகையை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். அண்மையில் பாடசாலை அதிபர் ச. புண்ணியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் கண்டாவளை கோட்டக் கல்வி அதிகாரி சு. தர்மரத்தினம் கலந்துகொண்டு பத்திரிகையை வெளியிட்டு வைத்துள்ளார்.

இலங்கைப் பாடசாலைகளில் இவ்வாறான பத்திரிகை வெளியீடு இடம்பெற்றதா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறிய பாடசாலை அதிபர் ச. புண்ணியமூர்த்தி, இந்தச் செயற்பாடு எமது மாணவர்களின் மிக முன்னுதாரணமான செயற்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

குறித்த சுவர் பத்திரிகை பாடசாலையில் இடம்பெறும் கல்வி மற்றும் இணைபாட விதானச் செயற்பாடுகள் குறித்த செய்திகளையும் கல்வி உயர்வு சாதனைகள் மற்றும் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஊடாட்டம் சார்ந்த செய்திகளையும் தாங்கி வரும் என நிகழ்வில் பேசிய ஊடக ஆசிரியர் பா. பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய முயற்சிகள் பாடசாலை மாணவர்களின் எழுத்து மற்றும் ஊடக ஆளுமையை வெளிக்கொண்டு வருவதற்கு பெரிதும் உதவும் என கண்டாவளை கோட்டக் கல்வி அதிகாரி சு. தர்மரத்தினம் கூறினார். அத்துடன் மாணவர்கள் தமக்குள் இருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்