குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குடாநாட்டுக்கு மேலதிக பொலிஸார் அனுப்பிவைப்பு

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸார், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் போன்ற சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

இதனால் குடாநாட்டில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், அரச தரப்பின் மீது கடும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு அரசாங்கம் தவறி விட்டதாக, தமிழ் அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்று திடீரென, யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸாரதும் விடுமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்த மேலதிக பொலிஸார் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து 100 பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நாளை மறுதினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்