யாழில் வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளோம்.

இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு எனது தலைமையின் கீழ் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளேன்.

விசேட வேலைத்திட்டத்திற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளதுடன், அவர்களுக்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாகனங்களும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பல அரசியல்வாதிகள், ஊடகங்கள் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய நீதியைப் போல துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு கூறுகிறார்கள். ஆனால் எமக்கென நீதி முறை ஒன்று உள்ளது.

எனவே அதனடிப்படையில் தான் நாங்கள் எமது பணிகளை முன்னெடுக்க முடியும். வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதன்மூலமே அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

அத்துடன் வடக்கில் ஆவா குழு என்று ஒரு குழு இல்லை. அவ்வாறான குழுக்கள் இயங்குவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இவ்விடயத்தினை ஆவாக் குழு இயங்குவதாகக் கூறி வருகின்றனர்.

பாடசாலைகளில் கல்வி கற்றுவிட்டு வேலையற்று இருக்கும் குறிப்பாக வெளிநாடுகளில் உறவினர்கள் வதியும் இளைஞர்கள் தமக்கிடையே வாள்வெட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த இளைஞர்களை நாம் இனங்கண்டுள்ளோம். இவ்விடயத்திற்கு நாம் விரைவாக முற்றுப்புள்ளி வைப்போம். யாழ்ப்பாணத்தில் நிலவும் வன்முறைக் கலாசாரத்தை இரண்டு வாரத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்.

இதேவேளை குறித்த வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ள பொலிஸார் தமது விசேட நடவடிக்கையின் பிரகாரம் வீதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். எனவே பொதுமக்கள் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்