கருணா- பொன்சேகா ஒப்பீடு வேண்டாம்

சரத்பொன்சேகாவையும் கருணா அம்மானையும் ஒப்பிட முடியாது. போராட்டத்தின் போது கருணா இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னரே அவருக்கு கடந்த அரசாங்கத்தில் கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஜயகலா மகேஸ்வரனது கருத்து தொடர்பில் நேற்று சபையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 600 பேரை கொன்ற ஒருவரை கடந்த ஆட்சியில் கட்சியின் உபதலைவராகவும், பிரபாகரனை கொன்றவரை சிறையில் அடைத்து தொடர்பில் மறந்து விடக் கூடாது என குறிப்பிட்டுள்ளமையானது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டினை திசை திருப்புவதாகவே அமைந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை பதவி நீக்க வேண்டும் என்பது கூட்டு எதிரணியினரது நோக்கமல்ல, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வடக்கில் பொதுச்சட்டம் வேறுப்பட்ட நிலைமையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது அரசியல் தீர்வு என்ற விடயத்தினை மையப்படுத்தி வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்து இனவாத கருத்துக்களையே வெளிப்படுத்தி அப்பாவி மக்கள் மீது தாக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவங்களை குறிப்பிட்டு தற்போதைய நிலைமையை திசை திருப்பாது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்த விஜயகலா மகேஸ்வரனது கருத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கூட்டு எதிரணியன் நோக்கம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்