வவுனியா கல்நாட்டிய குளத்தில் மருதநிலம் பூங்கா திறந்து வைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகானசபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியால் வவுனியாவின் தென்கோடியில் இயற்கை எழில்கொஞ்சும் மருதநிலம் சுற்றுலாத்தளம் இன்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வடமாகாணசபையின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வவுனியா கல்நாட்டியகுளத்தில் சுமார் பதினொரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மருதநிலம் பூங்காவை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய ப.சத்தியலிங்கம், வடமாகானசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் பிரதேசசபை செயலாளர் கிசோர் சுகந்தி பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்நாட்டியகுளம் கிராமம் புராதன வரலாற்றைக்கொண்ட கிராமமாகும். எனினும் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளதால் 1977, 1983, 1990 களில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளினால் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

இந்த நிலையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் மீள்குடியேறிவந்த நிலையில் கிராமத்தின் தெற்கு எல்லையில் குளத்தின் அருகில் காணப்பட்ட இயற்கையான குன்றில் பிறிதொரு மத அடையாளத்தை வைத்து ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான ஆபத்து இருந்தமையை உணர்ந்த கிராம இளைஞர்களும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியுமாக இணைந்து சிரமதானம் மூலமாக துப்பரவாக்கல் பணியை மேற்கொண்டிருந்தனர். இதன்பின்னராக கல்நாட்டினகுளம் முத்தமிழ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் நிதியொதுக்கீட்டில் முதற்கட்டமாக பிரதேசத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து முத்தமிழ் சனசமூக நிலையத்தின் சிந்தனையில் உருவாகியதே மருதநிலம் இயற்கை சுற்றுலா மையம். இதன் கட்டுமானப் பணிகளுக்காக வடக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சருமாகிய ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியினால் வடக்கு முதலமைச்சரின் கீழான மாகாண சுற்றுலாத்துறை திணைக்களத்தின் நிதியுதவியுடன் சுற்றுலா மையம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டது.

இதற்கு அண்மையில், 30 வருடங்களாக முகாம் வாழ்க்கை வாழ்ந்த 192 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை அவர்களுக்கு அதே இடத்தில் காணிகள் வழங்கி சிதம்பரநகர் எனும் புதிய கிராமத்தை உருவாக்கி வீட்டுத்திட்டமும் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்