வீடமைப்புத் திட்டம்: வடக்கு எம்.பிக்களுடன் ரணில் பேச்சு!

“வடக்குக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக அந்த மாகாணத்தைச் சேர்ந்த எம்.பிக்களை அழைத்துப் பேச்சு நடத்தவுள்ளேன்.”
 – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதமரிடமிருந்து நேரடிப் பதிலைப் பெற்றுகொள்வதற்கான கேள்வி  பதில் நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,
“வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி அதிகாரசபை நிறுவப்படும் எனக் கூறியிருந்தீர்கள். எப்போது அது நிறுவப்படும்?”  என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர்,
“நிர்வாக மட்டத்திலான அதிகாரசபையை உருவாக்கவே பார்க்கின்றோம். மத்திய  மாகாண அரசுகளுக்கிடையே  விடயதானங்களுடன் தொடர்புடையை தரப்புகளிடையே இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் அச்சபை இயங்கியது. கிழக்கு மாகாண சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது.
சட்டமொன்றைக் கொண்டுவருவதானால் மாகாண சபையின் அனுமதி அவசியம். இது தொடர்பில் முதல்வருடன் கலந்துரையாட முடியும்.
பிரதமர் அமைச்சின் அலுவலகத்தின் கீழ் தற்போது வடக்கு அபிவிருத்திக்கான அலுவலகமொன்று இயங்குகின்றது. வடக்குக்கான வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக அங்குள்ள எம்.பிக்களை அழைத்துப் பேசவுள்ளேன்” – என்றார்.
அதேவேளை, அரச நியமனங்களுக்குப் புள்ளிமுறை அடிப்படையில் பட்டதாரிகள் தெரிவுசெய்யப்படும் முறைமையை மாற்றமுடியாது. எனினும், பட்டதாரிகளுக்கான அரச நியமன வயதெல்லையை 45 ஆக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்