பழைய முறைப்படியே நாடாளுமன்றத் தேர்தல்!

“அடுத்த நாடாளுமன்றத் தேர்தலானது பழைய தேர்தல் முறைப்படி (விகிதாசார) நடைபெறுவதற்குரிய சாத்தியமே நிலவுகின்றது”  என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எந்தமுறையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து கட்சிகளிடையே இன்னும் இணக்கப்பாடு எட்டப்படாததாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியாதுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பொது எதிரணி எம்.பி. டலஸ் அழகப்பெருமவால் மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப்  பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்படி கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது குறித்து கடந்த வருடம் தீர்மானமொன்றை எடுக்கக்கூடியதாக இருந்தது. அந்த முறைமையின் கீழேயே மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. அந்த நோக்கில்தான் சட்டமூலமும் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும், நிலையான  ஸ்திரமானதொரு ஆட்சியை உள்ளூராட்சி சபைகளில் ஏற்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாகாண சபைகளிலும் அதன் தாக்கமிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இவ்வருடம் மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைகின்றது. ஆகவே, தேர்தல் நடத்தப்படவேண்டும்.
தேர்தல் முறைமை தொடர்பில் கட்சிகளிடையே வெவ்வேறான நிலைப்பாடுகளே இருக்கின்றன. மாகாண சபைத் தேர்தலை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி நடத்திவிட்டு, அடுத்த தேர்தலை புதிய முறைமையில் நடத்தலாம் என சில கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. சில கட்சிகள் இந்த விடயத்தில் இன்னும் தீர்மானமொன்றை எடுக்கவில்லை.
எது எப்படியிருந்தபோதிலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையும் பழைய முறைமைப்படியே நடத்தவேண்டியிருக்கும். எனவே, மாகாண சபைத் தேர்தலையும் பழைய முறைமைப்படியே நடத்தவேண்டும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்திவருகின்றேன். அடுத்த வாரமளவில் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளேன்.
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் எமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலையும் புதிய முறைமையில் நடத்தவேண்டும் என்பதுதான் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடாக  இணக்கப்பாடாக இருப்பின் அதைச் செய்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்