போரால் நலிவுற்ற பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

போரால் நலிவுற்ற பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு,வட மத்திய மாகாணங்களில் போரால் நலிவுற்ற சமூகங்கள்,அச் சமூகத்தில் வறுமை நிலையில் வாழ்பவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை மேற்கொள்ளும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (05.07.2018) காலை 10.00 மணி முதல் 2.00 மணிவரையும்  மட்டக்களப்பு ஈஸ்லகூன் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் சுவீடன் நாட்டின் வீ. எபக்ற் நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் போரால் நலிவுற்ற பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் வகையில் அமையவுள்ள இச்செயற்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தாலும், அனுராதபுர மாவட்டத்தில் ரஜரட்ட பிரஜா நிலையத்தினாலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

காவியா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திருமதி.யோகமலர் அஜித்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான அங்குரார்ப்பண நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, வீ. எப்பகற் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாசி திசாநாயக்க, திட்ட இணைப்பாளர் பிரியந்த ஜயக்கொடி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 2018 தொடக்கம் 2021 வரையான 4 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இத் திட்டத்தின் ஊடாக 26 கிராமங்களிலுள்ள 2953 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர்.

அத்தோடு 12 மீனவ மற்றும் விவசாய கூட்டுறவுச் சங்கங்களும் இந்த இடையீட்டில் ஈடுபடுத்தப்படுவர். பால்நிலை சமத்துவத்தினை உறுதிப்படுத்தும் முகமாக அங்கத்தவர்கள் தொழில் உரிமையாளர்களாகவும், தலைவர்களாகவும் மாறுவதற்கு ஏதுவாக சந்தைத் தொடர்புகள், நிதி பெறுதல், விவசாயத் திறமைகளை வளர்த்தல் போன்ற விடயங்களில் இச்செயற்திட்டத்தின் ஊடாக பயிறற்சிகள் அளிக்கப்படும்.

கூட்டுறவு அங்கத்தவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்கள் இந்தத்திட்டத்தின் மூலமாக கூட்டுறவு அணுகுமுறையின் அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ,பெண்கள் மற்றும் இளைஞர்களின் மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

வீ. எபகற் நிறுவனமானது சுவீடன் நாட்டின் கூட்டுறவு இயக்கங்களினால் 1958ஆம் ஆண்டு நிதியிடப்பட்ட நிறுவனமாகும். இலங்கையில் 1978ஆம ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தற்பொழுது 200 உள்ளுர் பங்காளி நிறுவனங்களுடன் 25 நாடுகளில் 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகிறது. இதற்கு நிதியளிப்பவர்களாக சுவீடன் அரசாங்கம், முதன்மையான கூட்டுறவு நிறுவனங்கள், தனிப்பட்ட கொடையாளிகள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் காணப்படுகின்றது.

காவியா நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக வறுமை, மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களோடு தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் விதவைகள் மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் விருத்தியை முதன்மையாகக் கொண்ட யுத்தத்தாலும்ம சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மகளிர் குழுக்களுடன் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. 250 சமூகக் குழுக்களுடனும் 44 உற்பத்தியாளர் குழுக்களுடனும் வாழ்வாதார உதவித்டதிட்டத்தையும்,சமூக வலுவூட்டல் திட்டத்தையும் முன்பாக நிதியளிப்பு திட்டத்தினையும் அமுல் நடத்திவருகிறது.

வங்கி உத்தியோகத்தர்கள், கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதிகள், மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, கோரளைப் பற்று தெற்கு, ஏறாவூர் பற்று, உள்ளிட்ட பிரதேச செயலகங்களின்  உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச சபைகளின் உத்தியோகத்தர்களும் இவ் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்