நியூயோர்க் ரைம்ஸின் அம்பலம்: சி.ஐ.டி. விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை உறுதி!

நியூயோர்க் ரைம்ஸின் அம்பலம்: சி.ஐ.டி. விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை உறுதி! – அரசு அறிவிப்பு
அம்பாந்தோட்டை துறைமுகத்தை தம்வசப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது சீன நிறுவனத்தால் 7.6 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதென ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர் என்றும், விசாரணை முடிவடைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதமரிடமிருந்து நேரடிப் பதிலைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்விநேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப்  பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2015 ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனாவால் 7.6 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதென ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்டது போல் இது தொடர்பிலும் விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்படுமா?” என்பதே மரிக்காரின் கேள்வியாகும்.
இதற்குப் பதிலளித்த பிரதமர்,
“இவ்விவகாரம் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை சி.ஐ.டியினருக்குப் பொலிஸார் வழங்கினர். இதன்பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவை முடிவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக “நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் இருக்கும்போது லசந்த, பிரகீத் எக்னெலிகொட ஆகியோரைக் கொன்றவர்கள், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதைவிட பெரிய செயல்களில் ஈடுபடுகின்றனர். ‘நியூயோர்க் ரைம்ஸ்’ஐத் தாக்குவோம் என அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
ஜனநாயகத்தை மதிப்பவர்களாயின், மேற்படி அறிவிப்பை இவர்கள் (பொது எதிரணியினர்) வாபஸ்பெறவேண்டும். உள்நாட்டு ஊடகங்களும் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்