பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ரூபா 800 மில்லியனை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணக்கம்..!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ரூபா 800 மில்லியனை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணக்கம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மிகப்பெரிய நிதியை நிலுவையாக செலுத்தவேண்டியிருந்தது. இந்நிதியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துடன் பல பேச்சுகளை நடத்திவந்தது.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சில் அரச தொழில் முயற்சி அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் ஹேவாவிதாரன, பெற்றோலியக்  கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ராஜித பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தப் பேச்சு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 13.45 பில்லியன் கடன் நிலுவையில் முதற்கட்டமாக ரூபா 800 மில்லியனை வழங்கத் தீர்மானித்துள்ளது. மிகுதிப் பணத் தொகையைச் செலுத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தனியார் வங்கியில் கடன்பெற முயற்சிக்கவுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குத் தொடர்ந்து எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்