விஜயகலா மகேஸ்வரனிடம் ஏற்பட்ட மாற்றம்! நாமல் கூறும் காரணம்

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் செயற்பாட்டுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்று ஈழ கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். அவருக்கு எதிராக ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்திவருகின்றது. எனினும், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசியிருக்கின்றார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்க போகின்றார்கள் என்பது தொடர்பில் எதிர்பார்த்திருக்கின்றோம். அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவது இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையப்போவதில்லை.

ஏனெனில், அவர் வெளியிட்டிருக்கும் கருத்தானது புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு நெருப்புக் கிடங்கில் பெற்றோல் ஊற்றியதைப்போன்ற விடயமாகும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்று ஈழ கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையே இதற்கு காரணமாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்