இந்திய அரசின் உதவியுடன் வடக்கில் அவசர அம்புலன்ஸ் சேவை

இந்திய அரசின் நிதி உதவியுடன்,’1990′ சுவபரிய (suwafariya) எனும் அவசர அம்புலன்ஸ் சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

இம்மாதம் 21 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வடமாகாண ரீதியில் குறித்த அவசர அம்புலான்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன.அவற்றில் யாழ் மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு 3 மாவட்டங்களுக்கு தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வீதம் வழங்கி வைக்கப்படவுள்ளன.

குறித்த செயல் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை வடக்கு சுகாதார அமைச்சில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுவபரிய அவசர அம்புலன்ஸ் சேவையை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தினர், வடமாகாணத்தில் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்,வட மாகாணத்தில் உள்ள பொது வைத்தியசாலைகளின் இயக்குனர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது.

ஒதுக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும்,ஒதுக்கப்பட்ட நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும்.

அவசர அம்புலன்ஸ் உதவி தேவைப்படுபவர்கள் குறித்த ‘1990’ (suwafariya) சுவபரிய அவசர அம்புலன்ஸ் சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நோயாளர்களை அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்