பழையமுறையில் மாகாணசபைத்தேர்தலை விரைந்து நடத்துங்கள்-அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

“புதிய தேர்தல் முறைமையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துங்கள்” என்று கூட்டரசின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறுகோரி பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் பலமுறைகளில் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் சாதகமானதொரு முடிவை தெரிவுசெய்யமுடியாதுள்ளது. இற்றைக்கும் அது பரீசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. அதாவது, இலங்கையானது தேர்தல் முறைமையைப் பரிசீலிக்கும் ஆய்வுகூடமாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமையால் எதிர்மறையான விடயங்கள் நீங்குமென எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையிலும் குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு புதிய குழுவொன்றை அமைத்துமீண்டுமொரு அறிக்கையைப் பெற்று புதிய முறைமையிலேயே தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டில் சில கட்சிகள் இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் இருந்தால் உரியகாலத்தில் தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலையேற்படும்.

எனவே, பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும், மீண்டும் கையடிக்காது, புதிய தேர்தலை முறைமையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதன்மூலம்தான் நியாயம் கிடைக்குமென நம்புகின்றோம்.

விருப்புவாக்கு முறைமைக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல்முறையின்கீழ் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது பாரிய மோசடிகள் இடம்பெற்றன. அவற்றை எம்மால் தடுக்கமுடியாமல்போனது. தொகுதிகளை கைப்பற்றுவதற்காக பணம் அள்ளிவீசப்பட்டது.

இருந்த முறைமையைவிட அறிமுகப்படுத்தப்பட்ட முறைமையானது சிக்கல்களை உருவாக்கியதால்தான் கூறுகின்றோம். டிசம்பரில் தேர்தல் நடைபெறவேண்டுமானால் பழைய முறைமையே சிறந்த தெரிவாக இருக்கும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதுமட்டுமல்ல, எல்லை நிர்ணய அறிக்கையானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாதகமாகவுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்