புதிய முறையிலேயே மாகாணசபைத்தேர்தல்-அமைச்சர் பைஸர் முஸ்தபா விடாப்பிடி


புதிய தேர்தல் முறைமையால் எந்தவொரு கட்சிக்கும் அநீதி ஏற்படாது என்றும், மீண்டும் பழைய முறைமைக்கு செல்வதானது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே அமையும் என்றும் மாகாண மற்றும் உள்ளுராட்சிசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“புதிய முறைமையிலேயே தேர்தலை நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் என்னிடம் வலியுறுத்தியுள்ளன. மேலும் பல தரப்புகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன. புதிய முறைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது அமைதியாக நடைபெற்றது. ஊழல், மோசடிகள் குறைவடைந்தன. எனவே, புதிய முறைமைதான் சிறப்பான திட்டமாக இருக்கின்றது.

அத்துடன், புதிய தேர்தல் முறைமைக்கு கைதூக்கி ஆதரவளித்தவர்கள் இன்று அதை விமர்சிக்கின்றனர். குறிப்பாக, சிறுபான்மைக் கட்சிகள் சில தேசிய கட்சிகளுடன் இணைந்து இனவாத அரசியலை நடத்திவருகின்றன. அக்கட்சிகள் கூறுவதுபோல் புதிய தேர்தல் முறைமையால் எந்த இனத்துக்கும் அநீதி இழைக்கப்படாது. நிலைமை இப்படியிருக்கையில், வாக்குகளுக்காக சமூகத்தை விற்கின்றனர். புதிய முறைமையால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறையாது.

அதேவேளை, தாமதம் ஏற்படுகின்றது என்ற காரணத்துக்காக பழையமுறைமையில் தேர்தலை நடத்துவதென முடிவெடுப்பது நியாயமான தீர்மானமாக இருக்காது. பணத்தை மையமாகக்கொண்ட அரசியல் வேண்டாம். மோசடிமிக்க பழைய முறைமைக்குச் சென்றால் அது மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும்.

எனவே, தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதியின்படி ஜனாதிபதியும், பிரதமரும் செயற்படவேண்டும்.சில சிறு கட்சிகள் இன்று தேசிய அரசை ஆட்டிப்படைக்கி ன்றன. இந்நிலைமை மாறவேண்டும்.

அவ்வாறில்லாவிட்டால் அரசியல் எதிர்காலமொன்று இருக்காது. நான் இந்த நாடுமீது பற்றுவைத்துள்ளேன். அதனால்தான் இனவாத அரசியலை ஒருபோதும் நடத்துவதில்லை.

மீண்டும் பழைய தேர்தல் முறைமைக்கு நான் சென்றால் அது இனவாத அரசியலுக்கே வழிவகுக்கும். கலப்புமுறைமையை விடுத்து விகிதாசார முறைமைக்குச் சென்றால் அது பாதிப்பாக அமைந்துவிடும். எனவே, குறைபாடுகள் இருப்பின், அவற்றை நிவர்த்திசெய்துகொண்டு புதிய முறைமையில் தேர்தலை நடத்துவோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்