வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது மேற்கிந்தியதீவுகள்

அண்டிகுவா டெஸ்டில் தனது அபாரமான பந்து வீச்சினால் மேற்கிந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்காள தேசம் மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அண்டிகுவா நகரில் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேற்கிந்திய அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக, கெமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை வெளியேற்றினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இனிங்சில் 43 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

மேற்கிந்திய அணியின் கெமர் ரோச் 8 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய அணி தனது முதல் இனிங்சில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 113 ஓட்டங்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய பாவெல் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராத்வைட் சிறப்பாக ஆடி 121 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய ஷாய் ஹோப் 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஜேசன் ஹோல்டர், கெமர் ரோச் ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர். இறுதியில், மேற்கிந்திய அணி 137.3 ஓவரில் 406 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, வங்காள தேசம் அணியினர் இரண்டாவது இனிங்சை ஆடினர். முதல் இனிங்ஸ் போலவே விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.

இறுதியில், வங்காள தேச அணி 40.2 ஓவரில் 144 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. நுருல் ஹசன் மட்டும் தாக்குப்பிடித்து 64 ஓட்டங்கள் எடுத்தார்.

மேற்கிந்திய அணி சார்பில் ஷனோன் கப்ரியல் 5 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, மேற்கிந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக கெமர் ரோச் தேர்வு செய்யப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்