இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

கார்டிபில் நடைபெற்ற இரண்டாவது ரி 20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி.

நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அத் தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 , ஷிகர் தவான் 10 , லோகேஷ் ராகுல் 6 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. தோனி 32 , பாண்ட்யா 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 149 ஓட்டங்கள் இலக்காக கொண்டு இங்கிலந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இறங்கினர்.

உமேஷ் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்க்காரர்களை வெளியேற்றினார். ராய் 15 , பட்லர் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.. அடுத்து இறங்கிய ஜோ ரூட் 9 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருபுறம் நிதானமாக ஆடினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ரி 20 தொடர் 1-1 சமனிலையில் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்