நிதி மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர்  பணி நீக்கம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுர்த்தி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

சமுர்த்தி பயனாளிகளின் பெயர் விபரங்களின் மூலம் புளியங்குளம் சமுரத்தி வங்கியில் கடன்களுக்காக விண்ணப்பித்து கடன்தொகையை பெற்று நிதி மோசடி செய்தமை தொடர்பாக வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலர் மீது கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம் மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தால் இவ் விடயம் தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. பின்னர் வவுனியா மாவட்ட சமுர்த்தி இயக்குனரின் வேண்டுகோளுக்கமைய கொழும்பில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தின் தலைமைப் பணிமனையின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணையின் முடிவுகளின் பிரகாரம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஐவர் குறித்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த ஐவரையும் பதவியில் இருந்து நீக்குமாறு சமுர்த்தி தலைமை அலுவலகத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட இயக்குனர் மற்றும் அரச அதிபர் ஊடாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு குறித்த கடிதம் அனுப்பப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுர்த்தி இயக்குனர் தெரிவித்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஐவரும் 2013ம் ஆண்டு சமுர்த்தி திணைக்களத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்