யாழிலிருந்து அம்பாறை சென்ற பஸ்ஸை ஒருமணிநேரம் தடுத்துவைத்த பொலிஸார்

வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பயணிகளை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் நேற்று (10.07) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் போது பேருந்திலிருந்து 2 கிலோ கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து நொச்சிமோட்டையிலிருந்து பேருந்தில் எவ்வித பயணிகளையும் ஏற்றாமலும், இறக்காமலும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பேருந்தினை எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தின் வாயிலை மூடி பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரையும் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இரவு 9.00 மணியளவில் பேருந்தினை பொலிஸ் நிலையத்தினுள் எடுத்துச் சென்றதுடன் இரவு 10.00 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக பயணிகள் எவரையும் வெளிச்செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பயணிகள், உறவினர்கள் ஒன்று கூடியதனால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சற்று பதற்ற நிலை காணப்பட்டது.

இரவு உணவின்றி மாணவர்கள் தவித்ததுடன் அவர்களை சந்திப்பதற்கும் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பொலிஸாரின் இவ்வாறான செயற்பாட்டினால் நொச்சிமோட்டையிலிருந்து வவுனியா வரை உள்ள பகுதிகளில் இறக்க வேண்டிய பயணிகள் வீடு செல்ல பேருந்து இல்லாத நிலையில் தவித்தனர்.

ஓரு மணித்தியாலயத்தின் பின்பே பேருந்து செல்ல அனுமதிவழங்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்