விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சா,ஹெரோயினுடன் இருவர் கைது

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை நேற்று (10) மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினர்களான பொலிஸ் பரிசோதகர் பன்டார, பொலிஸ் சாஜன்களான எம்.என்.மென்டிஸ், இந்திக்க பெரேரா, எஸ்.தினுச, எஸ்.நிமால் உள்ளிட்டோர் கைது செய்துள்ளனர்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2700 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா என்பன வியாபார நடவடிக்கைக்கு கொண்டு சென்ற போது வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதைப் பாவனை இடம்பெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு, பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்