சட்டம் ஒழுங்கு அமைச்சர்,பொலிஸ்மா அதிபர் குடாநாட்டுக்கு விஜயம்

 


யாழ்ப்பாண குடாநாட்டில் வாள்வெட்டு, கொள்ளை மற்றும் சிறுவர் மீதான துன்புறுத்தல் என குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார ஜயமக மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய வளாகத்துக்கு இன்று முற்பகல் 10.30 மணிக்கு வருகை தந்த சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு யாழ்ப்பாண பொலிஸாரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான சிறப்பு கூட்டம் அமைச்சர் தலைமையில் ஆரம்பமானது.

இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார யாழ். மாவட்டத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், யாழ்ப்பாண ஆயர் உள்ளிட்டோரையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மக்களிடம் மீண்டும் தலைதூக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவு மனோநிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காகவே சட்டம், ஒழுங்கு அமைச்சரும் பொலிஸ் மா அதிபரும் யாழ்ப்பாணத்துக்கு பயணமாகின்றனர் என பிரதியமைச்சர் நளின் பண்டார ஜயமக தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்