தத்தளித்த இலங்கை மீன்பிடிப் படகை கண்டுபிடித்த அமெரிக்க விமானம்!

சர்வதேசக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகை, அமெரிக்கக் கடற்படையின் கடல் ரோந்து விமானம் கண்டறிந்துள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி-8ஏ, போஸிடான் என்ற விமானமே இதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இலங்கைக் கடற்படையினரின் கோரிக்கைக்கு அமைவாகவே, கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்கள் ஏழு பேருடன் கடந்த மாதம் 10ஆம் திகதி தொழிலுக்குச் சென்று பல நாள்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும், “அகநிஸ” எனப்படும் குறித்த படகே, சர்வதேசக் கடலில் தத்தளித்தது.

இயந்திரக் கோளாறு காரணமாக, சர்வதேசக் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த மீன்பிடித் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான பணிப்பாளர் எஸ்.டீ.பீ திசேரா, அப்படகையும், மீனவர்களையும் கரை சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

“குறித்த படகு, தியேகோ கார்சியா – மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான சர்வதேசக் கடலில் மிதந்து கொண்டிருப்ப​தை ரோந்து விமானம், புகைப்படமெடுத்து அனுப்பி வைத்துள்ளது என்றும் தூதரகம் விடுத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்