யாழ்,கிளிநொச்சியில் மக்களை சந்திக்கிறது காணாமல் போனோர் அலுவலகம்

காணாமல்போனோர் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட அலுவலகம் தனது அடுத்த மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பை ஜூலை 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் ஜூலை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பின்போது ஆணைக்குழுவிலுள்ள 7 ஆணையாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இவ் ஆணையாளர்கள் காணாமற்போனோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலார்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக கேள்வியெழுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் கடந்த மே மாதம் முதல் மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பை ஆரம்பித்திருந்தது. ஏற்கெனவே மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிராந்திய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9 மணிமுதல் யாழ் மாவட்ட பொது மக்கள் சந்திப்பு நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம்,

நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளிலும் காணாமற்போனோரின் உறவுகளுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதே வேளை கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியளாலர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்