நவாஸ்ஷெரீப் மீதான ஏனைய ஊழல் வழக்குகள் சிறையில் வைத்தே விசாரணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எதிரான மற்றய ஊழல் வழக்குகளை அவர் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறைக்குள் வைத்தே விசாரிக்க அந்நாட்டின் பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக 3 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் அவென்பீல்ட் வழக்கில் நவாஸ் ஷரிப் அவரது மகள் மரியம் நவாஸ், மற்றும் மருமகன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் லாகூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் அடியாலா சிறையில் ‘பி’ வகுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நவாஸ் ஷரிப் மீது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை சிறைக்குள் வைத்தே விசாரிக்க பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அவென்பீல்ட் வழக்கில் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் மருமகன் சப்தார் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து திங்களன்று மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் கவாஜா ஹாரிஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்