உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: மூன்றாமிடத்தைப் பிடித்தது பெல்ஜியம்

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் பெல்ஜியம் அணி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாமிடத்திற்கான போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

சென். பீட்டர்ஸ்பேர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் Meunier பெல்ஜியம் அணிக்கு 4 ஆவது நிமிடத்தில் முதல் கோலை ஈட்டிக்கொடுத்தார்.

இங்கிலாந்து வீரர்களால் முதல் பாதியில் கோலடிக்க முடியவில்லை.

இதன்படி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேலும் திறமையாக விளையாடிய பெல்ஜியம் வீரர்கள், அந்த பாதியில் மற்றொரு கோலையும் போட்டார்கள்.

ஈடின் அஷார்டினின் திறமையான ஆற்றலின் மூலம் அந்த கோல் பெறப்பட்டது.

ஹரி கேன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து அணியால் இறுதி வரை கோலடிக்க முடியாமற்போனது.

இறுதியில் இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பெல்ஜியம் அணி தொடரில் மூன்றாமிடத்தைப் பிடித்தது.

இங்கிலாந்து நான்காமிடத்தை அடைந்தது.

இதேவேளை, உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் க்ரோஷியாவும் பிரான்ஸூம் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்