யாழ்ப்பாணத்தில் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போனோர் பணியகத்தின் அமர்வு

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தினர்.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அமர்வு நேற்று யாழ்ப்பாண நகரில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில், பணியகத்தின் ஏழு ஆணையாளர்களும் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனும் தனித்தனியாக கலந்துரையாடினர்.

இந்த அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் போனோர் பணியகத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வலியுறுத்தியும், வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

தாம் பல ஆணைக்குழுக்களின் முன்பாக முறையிட்டும் எந்தப் பலனும் கிட்டவில்லை என்றும் தமக்கு இன்றே தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

எனினும், தம்மால் உடனடியாக தீர்வை வழங்க முடியாது என்றும் இது சிக்கலான விவகாரம் என்றும் சாலிய பீரிஸ் கூறினார்.

அவரது கருத்தை புறக்கணித்த உறவுகள், வீரசிங்கம் மண்டபத்துக்குள் நுழைந்து, அமர்வில் பங்கேற்றவர்களிடம், வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர். அழுது ஆர்ப்பாட்டம் செய்து, தமக்கு நீதி வழங்குமாறு கோரினர். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது.

எனினும், பணியக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அமர்வு இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்