சமூகத்தைச் சீரழிப்பவர்களுக்கு மரணதண்டனை அவசியம்: சிறிநேசன்

சமூகத்தை அழிக்கின்ற கயவர்களுக்கு மரணதண்டனை அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எமது எதிர்கால சமூகம் மிக மோசமான முறையில் சீரழிக்கப்பட்டு நடைப் பிணங்களாக ஆக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலை இப்போது காணப்படுகின்றது.

இன்று எமது நாட்டுக்கு எதிர்காலமே இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கின்றபடியால், இப்படியாக போதைப்பொருள் மூலம் எமது சமூகத்தை அழிக்கின்றவர்களை நிச்சயமாக தண்டிக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலையில் இருந்துகொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தை மிகவும் சுலபமாக நடத்திக்கொண்டு வருகின்றார்கள்.

அவர்களுக்கு உச்சபட்சமான மரணதண்டனை வழங்கப்படும்போது அதனைப் பார்த்தாவது மற்றவர்கள் திருந்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இப்படியான போதைப்பொருள் கடத்தல் இருக்கவில்லை. சிறுவர் துஷ்பிரயோகம் இருக்கவில்லை. ஆவாக் குழுக்கள் இல்லை. இவ்வாறு பெரும் குற்றச்செயல்கள் நாட்டில் இருக்கவில்லை.

இவ்வாறான செயல்களைச் செய்தால் பாரிய தண்டனை வழங்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக குற்றச் செயல்கள் நடைபெறவில்லை. ஆனால், தற்போது குற்றச்செயல்கள் மலிந்துவிட்டன. திட்டமிட்டு சமூகத்தை சீரழிக்கின்றவர்களுக்கு தண்டனை அவசியம். அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது அவசியம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்