ட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையிலான எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு, பின்லாந்து தலைநகர் Helsinkiஇல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின் இறுதிக்கட்டமாக, ட்ரம்ப் இன்று புட்டினை சந்திக்கவுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது இணைய ஊடுருவலை மேற்கொண்டதாக 12 ரஷ்யர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெறும் இச்சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்குற்றச்சாட்டை புட்டின் முழுமையாக நிராகரித்திருந்த நிலையில், இன்றைய சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பாக ட்ரம்ப் நேரடியாகவே வினவுவார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், ஏ.பி.சி. செய்திச்சேவையிடம் கூறியுள்ளார்.

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பை முன்னிட்டு, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2000இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் பின்லாந்து தலைநகரில் குவிந்துள்ளனர்.

இச்சந்திப்பு தொடர்பில் குறைந்தளவான எதிர்பார்ப்புகளே காணப்படுவதாக குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், சிறந்த விடயங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அத்தோடு, உலக நாடுகளில் அணுவாயுத தடை தொடர்பில் புட்டினுடன் முக்கிய உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ரஷ்ய உளவாளி ஒருவருக்கு பிரித்தானியாவில் நஞ்சூட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யாவே செயற்பட்டுள்ளதென பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த மாதமும் இருவர் இந்த நச்சுத்தாக்குதலுக்கு உள்ளாகியதோடு, அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், புட்டினுடனான சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பவுள்ளதாக, பிரதமர் தெரேசா மேயுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.

இவற்றுடன் சிரிய விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – வடகொரிய தலைவர்கள் சந்திப்பின் பின்னர் இடம்பெறவுள்ள மிகமுக்கிய சந்திப்பாக இச்சந்திப்பு அமையவுள்ளதோடு, உலக நாடுகள் இச்சந்திப்பு தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்