இஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்!

இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் புதிய போர்நிறுத்த ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஹமாஸ் போராளிகள் உறுதிப்படுத்தினாலும், இனிவரும் காலங்களின் நிலைமையைப் பொறுத்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுமென இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா எல்லை பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக தொடர்ச்சியாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2005ஆம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசாங்கம், இதன் பின்னர் அங்கிருந்து தமது படைகளை விலக்கிக்கொண்டாலும், அங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியே வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டதோடு, இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையிலான மோதலும் உக்கிரமடைந்தது.

இந்த நிலையிலேயே, ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் இடையே நேற்று புதிய போர்நிறுத்த ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.

எகிப்து நாட்டின் சமரச திட்டத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேல் அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக காஸா பகுதியில் இயங்கிவரும் ஹமாஸ் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் பவ்ஸி பர்ஹோம் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தாக இஸ்ரேல் அரசாங்கம், இனி நடைபெறும் சம்பவங்கள் மற்றும் களநிலவரங்களின் அடிப்படையில்தான் இந்த போர்நிறுத்தம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்