ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடம்

சீனாவின் அலிபாபா நிறுவனங்களின் தலைவர் ஜாக் மா-வை பின்னுக்குத் தள்ளி தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார் முகேஷ் அம்பானி.

எண்ணெய் சுத்திகரிப்பு முதல் டெலிகாம் வரை எண்ணற்ற தொழில்களில் கோலோச்சி வரும் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்றைய தினம் 1.6% உயர்ந்துள்ளது,

இதன் மூலம் அவரின் மொத்த சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

நேற்றுடன் நிறைவடைந்த அமெரிக்க வர்த்தகத்தின் முடிவில் சீனாவின் அலிபாபா நிறுவனங்களின் தலைவர் ஜாக் மா-வின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டொலர்களாக இருந்ததாக உலக கோடீஸ்வரர்கள் குறித்து ஆராய்ந்து வரும் Bloomberg நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரையில் ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்து வந்த ஜாக் மா-வை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 4 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய சேமிப்புத் திறன் அதிகரித்தது மற்றும் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் எழுச்சி ஆகியவை இதற்கு துணை புரிந்ததாக Bloomberg நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரிய அளவிலான திட்டங்கள், உலகின் பெரிய சுத்திகரிப்பு மையத்தை ஜாம்நகரில் நிறுவியது, உலகின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கை கொண்டுள்ளது, இந்தியாவின் லாபமளிக்கும் பெரிய சில்லரை நிறுவனத்தை கொண்டுள்ளது ஆகியவை முகேஷ் அம்பானியின் பிளஸ் என பார்க்கப்படுகிறது.

ஜியோ நிறுவனமே முகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 1,100 நகரங்களில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்