சர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்

சர்வதேச சமூகம் தமிழ் மக்களை காப்பாற்றும். அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்குமென எதிர்பார்ப்பதில் எந்ததொரு பயனுமில்லையென வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“சர்வதேச சமூகம் விடுக்கும் அழுத்தத்தின் மூலம் தமிழர்கள் தீர்வை பெற்றுவிடலாம் என்று நம்புகின்றனர். இது நிச்சயம் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை.

சர்வதேசம் தீர்வை பெற்றுக்கொடுக்குமென எண்ணி, நாம் எங்களது கையில் இந்த போராட்டத்தை எடுக்காமல் விடுவோமாக இருந்தால் நிச்சயமாக எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை.

மேலும் தமிழ் கட்சிகள் பிரிந்து செயற்படும் வரை மக்களுக்கு வேண்டிய தேவையை பூர்த்தி செய்துகொடுக்க முடியாது. எனவே கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுதரும் என்கின்ற நம்பிக்கை இன்று மக்கள் மத்தியில் இல்லை. காரணம் அவர்களும் ஒற்றுமையாக இல்லை. தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளுக்காக தான் இங்கே அரசியல் நடாத்தப்படுகின்றது. இதனால் தமிழர்களுக்குதான் எதிர்காலம் இல்லாமல் போகின்றது.

எனவே எங்களுக்குள் இருக்கும் பேதங்கள் முரண்பாடுகள் அனைத்தும் உடனே களையப்பட்ட வேண்டும். ஆயுத பலம் இன்று இல்லாமல் போயுள்ளதால் ஊருக்கு ஒரு சண்டியன், கிராமத்திற்கு ஒரு சண்டியன் என்ற நிலை உருவாகிகொண்டிருக்கிறது.

மேலும் அனைத்தையும் விட்டு அரசிடம் சென்று அமைச்சு பதவிகளை பெற்று அபிவிருத்தியை செய்யலாமென பலர் பேசி வருகிறார்கள். அப்படி என்றால் இங்கே மரணித்த தோழர்கள் எதற்காக மரணித்தார்கள்? இந்த துப்பாக்கியை ஏன் ஏந்தினார்கள் என்பதை நாம் சற்று உணர்ந்து கொள்ளவேண்டும்.

இன்று வெளிநாடுகளில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் விடுதலை வேட்கையுடன் இருக்கிறார்கள். யூதர்களை அழித்து ஒழித்தார்கள் அவர்கள் அழிந்தா போயினர். அவர்கள் இன்று ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார்கள். தமிழர்கள் ஒன்றும் பலவீனமானவர்கள் அல்ல யூதர்களுக்கு இணையானவர்களும் அல்ல அதற்கும் மேலானவர்கள்.

ஆகையால் நாம் இனிமேல் போராட வேண்டியது அறிவியல் போராட்டமாகதான் இருக்கவேண்டும். அதனை எம் கரங்களில் எடுக்கவேண்டும். ஒவ்வொரு தமிழர்களும் தமது மூளை பலத்தை இனத்திற்காக பயன்படுத்தவேண்டும்.

நாம் புத்திசாலிகளாக இருந்தமையினால்தான் யாழ் நூலகத்தை முதலில் எரித்தார்கள். எனவே நாம் எமது அறிவை பயன்படுத்துவதன் மூலம் தான் எமக்கான விடுதலையை பெற முடியும்” என சிவநேசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்