இங்கிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா – தவான் ஜோடி ஓட்டங்கள் குவிக்க திணறியது. 18 பந்தில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் நிதானமாக விளையாடி சீரான வேகத்தில் ஓட்டங்களை குவித்தனர்.

17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரெய்னா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 21 ஓட்டங்களும், டோனி 66 பந்தில் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ) ஓரளவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனால், இங்கிலாந்து அணிக்கு 257 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.4 ஓவரின் 43 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் தாக்கூர் பந்துசீச்சில் ரெய்னாவிடம் பிடி கொடுத்து பெய்ர்ஸ்டோ ஆட்டமிழ்ந்தார். அவர் 13 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 30 ஓட்டங்கள் விளாசினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வின்ஸ் 27 ஓட்டங்களில் ரன் அவுட் ஆன நிலையில் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் ஜோடி சேர்ந்தனர்.

இந்திய பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தினறினர்.

ரூட் 60 பந்துகளிலும், மோர்கன் 58 பந்துகளிலும் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இணைந்து 186 ஓட்டங்களை சேர்த்து அசத்தினர்.

இறுதியில், பாண்டியா வீசிய 44வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜோ ரூட், 120 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 13-வது சதத்தை பதிவுசெய்தார்.

மோர்கன் 108 பந்துகளில் 88 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்