வடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்

வடபகுதி மக்களுக்கு மேலும் பல பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்ன நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் தென்பகுதி மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கி விடும் என்ற அச்சம் காணப்படுகிறது. எனினும் அந்த அமைப்பு மீண்டும் தலைதூக்காது என்பது தமது நம்பிக்கையாகும் என பிரதமர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும், 2015 ஆம் ஆண்டின் பின்னரே நட்புறவும் ஒருமைப்பாடும் ஏற்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கி இருப்பதாக எடுத்துக் கூற சில பத்திரிகைகள் மேற்கொள்ளும் முயற்சி குறித்தும் பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார்.

வடக்கில் உள்ள அனைத்து வங்கிகளிலும். 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது. இதனை இந்தப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு முதலீடு செய்ய முடியும்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, வடக்கிலுள்ள மக்கள் தமது சேமிப்புகளை முதலீடு செய்ய வேண்டும். சேமிப்புகளுக்கான வரியை விட, முதலீடுகளுக்கான வரி மிகவும் குறைவு.

போரினால் இந்தப் பகுதி பேரழிவைச் சந்தித்தது. மக்கள் தமது முதலீடுகளை இழந்தனர்.

முதலீடு தான் பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குகிறது. அதற்கான முயற்சியை நாம் எடுக்கிறோம்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தோர், பெருமளவு நிதியை அனுப்பியுள்ளனர். அதில் பெரும்பாலானவற்றை வங்கிகளில் மக்கள் சேமித்துள்ளனர்.

இந்த நிதி பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்